ஜப்பானைச் சேர்ந்த 116 வயதான மூதாட்டியான டனாகா, உலகின் அதிக வயதான பெண்மணி என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இதற்கான அங்கீகாரத்தை உலக சாதனைகளை அங்கீகரிக்கும் கின்னஸ் நிறுவனம் வழங்கியுள்ளது. இதன்மூலம், உலகின் அதிக வயதான பெண்மணியாக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.
ஜப்பான் நாட்டின் தென் பகுதியில் அமைந்துள்ள ஃபுகுஓகா நகரில் உள்ள ஒரு நர்சிங் ஹோமில் வசிப்பவர், காநே டனாகா. இவர் 1903-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2-ஆம் தேதி பிறந்தவர். இவர் ஹிடியோ டனாகா என்பரை 1922-ஆம் மணந்தார். இவர்களுக்கு 4 குழந்தைகள்.
இந்நிலையில், கடந்த ஜனவரி 2-ஆம் தேதி டனாகா தனது 116-வது பிறந்தநாளை கொண்டாடினார். டனாகாவின் பிறப்பு குறித்த ஆவணங்ளை சரிபார்த்த கின்னஸ் குழுவினர், அதனை ஏற்றுக் கொண்டு அங்கீகரித்துள்ளனர்.
காலை 6 மணிக்கு எழுந்து தனது வேலைகளை தானே பார்த்துகொள்ளும் டனாகா, கணிதம் பயில்வதை பொழுதுபோக்காக கொண்டவராம். கின்னஸ் உலக சாதனை குழுவினரிடமிருந்து சான்றிதழை பெற்றுக்கொண்ட 116 வயதான மூதாட்டி டானாகா, கேக் வெட்டி, மற்றவர்களுக்கு அளித்தும், தாமும் உண்டு மகிழ்ந்தார்