ஆஸ்திரேலியாவில் ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகளை பெற்றெடுத்த தாய்.
பிரசுரிக்கபட்ட திகதி: 11/05/2016 (புதன்கிழமை)
மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த் நகரை சேர்ந்தவர் கிம் டக்கி (26) இவருடைய கணவர் வவுகன் இருவருக்கும் ஏற்கனவே பள்ளிக்கு செல்லும் வயதில் இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். எனினும், ஒரு ஆண் குழந்தை வேண்டும் என இருவரும் விரும்பியுள்ளனர்.
பெற்றோரின் ஆசைப்படி, கடந்த வருடம் கிம்டக்கி கர்ப்பம் தரித்துள்ளார். இந்த ஆண்டு ஜனவரி மாதம் குழந்தை பிறக்கும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்
இந்நிலையில்,வழக்கத்திற்கு மாறாக கிம்மின் வயிறுமிகவும் பெரிதாக வளர்ச்சி அடைந்துள்ளது. அப்போது,மருத்துவமனையில் சோதனை செய்தபோது, அவரது வயிற்றில் 5 சிசுக்கள் வளர்ந்து வருவதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.
தன்னுடைய வயிற்றில் 5 பிள்ளைகள் வளர்ந்து வருவதை அறிந்து கிம் சிறிது கலக்கம் அடைந்திருந்தாலும், கணவரின் தைரியமான கவனிப்பால் அவர் பிரசவத்திற்கு தயாரானார்.
எனினும்,ஒவ்வொரு நாள் இரவிலும் அவரால் சரியாக தூங்க முடியவில்லை. ஒரே இரவில் 12 முறை கழிவறைக்கு செல்லவேண்டிய சிரமம் ஏற்பட்டது.
அதேபோல், 5 குழந்தைகளையும் சுகப்பிரசவமாக பெற்றெடுக்க வேண்டும் என்பதால், பிரசவத்திற்கு தேவையான அனைத்து உடல் பயிற்சிகளையும் அவர் தவறாமல் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் பிரசவத்திற்காக கிம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பிறக்கப்போகிறது என்பதால், அனைத்து குழந்தைகளையும் காப்பாற்றும் பொருட்டு அவசர சாதனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தன.
பின்னர், கிம்மிற்கு இயற்கையாக பிரசவ வலி தொடங்கியதும், 2 நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில் அடுத்தடுத்து 5 குழந்தைகளையும் அவர் பெற்றெடுத்துள்ளார்.
பெற்றோர் எதிர்ப்பார்த்தது போல், ஒரு ஆண்குழந்தை மற்றும் 4 பெண் குழந்தைகள் பிறந்துள்ளனர். பின்னர், குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்ச்சி அடைந்ததும் அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு திரும்பியுள்ளனர்.