ஷி ஜின்பிங் - நரேந்திர மோதி : "கவின்மிகு மாமல்லபுரத்தை சீன அதிபருடன் சுற்றிப் பார்த்ததில் மட்டற்ற மகிழ்ச்சி" - இந்திய பிரதமர்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/10/2019 (வெள்ளிக்கிழமை)
மேலும், மாமல்லபுரம், இந்தியாவின் பேரழகு வாய்ந்த இடங்களுள் ஒன்று. உயிர்த்துடிப்பு மிக்க ஊர். வாணிபம் மற்றும் ஆன்மிகத்துடன் தொடர்பு கொண்டிருந்த இடம். தற்போது உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்குகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாலை 5 மணி அளவில், மாமல்லபுரத்தை சென்றடைந்த சீன அதிபர் ஷி ஜின்பிங்கை இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி வரவேற்றார். தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையை அணிந்திருந்தார் பிரதமர் மோதி.
இந்தியப் பிரதமருடன் இணைந்து அங்குள்ள வரலாற்றுச் சின்னங்களைப் பார்வையிட்டார் சீன அதிபர். இந்தத் தருணத்தில் இரு தலைவர்களுடனும் வரும் தூதுக் குழுவினர் சற்றுத் தூரத்திலேயே இருந்தனர்.
அர்ச்சுனன் தபசு, ஐந்து ரதங்கள், கடற்கரைக் கோயில் ஆகிய வரலாற்றுச் சின்னங்களின் முக்கியத்துவத்தை பிரதமரே சீன அதிபருக்கு விளக்கிச் சொன்னார். அப்போது மொழிபெயர்ப்பாளர்களைத் தவிர, இந்தியத் தொல்லியல் துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவரும் உடனிருந்தார்.
அதனைத் தொடர்ந்து இருவரும் அமர்ந்து இளநீர் பருகினார்கள்.
கடற்கரை கோவிலில் இந்தியப் பிரதமரும் சீன அதிபரும் கலை நிகழ்ச்சி ஒன்றைக் கண்டுகளித்தார்கள். இந்த நிகழ்ச்சியை சென்னையில் உள்ள கலாஷேத்ராவைச் சேர்ந்த குழுவினர் நடத்தினர்.
இரவு உணவு
இதற்கடுத்து இரவு உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த இரவு உணவில் கலந்துகொள்பவர்கள் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில், இதில் சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமே கலந்துகொள்வார்கள் என இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதாவது இரு நாட்டுத் தலைவர்கள், உடனிருக்கும் அதிகாரிகள் மட்டுமே இந்த இரவு உணவில் பங்கேற்பார்கள். வெளியிலிருந்து வேறு யாருக்கும் இந்த விருந்திற்கு அழைப்புவிடுக்கப்படவில்லை என வெளியுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
விருந்தின்போது, பிரதமரும் சீன அதிபரும் மொழிபெயர்ப்பாளர்களுடன் தனியே அமர்ந்து உணவருந்துவார்கள்.
இந்த இரவு விருந்தில் தமிழக உணவுகளும் சீன உணவுகளும் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்குப் பிறகு மீண்டும் சாலை வழியே சென்னை திரும்புகிறார் சீன அதிபர்.
நாளை என்ன திட்டம்?
சனிக்கிழமையன்று காலையில், மீண்டும் மாமல்லபுரம் வரும் சீன அதிபர், பிரதமர் தங்கியுள்ள ஃபிஷர்மேன் கோவ் ஹோட்டலில் அவரைச் சந்தித்துப் பேசுகிறார். இந்தச் சந்திப்பில் இரு தலைவர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் மட்டுமே பங்கேற்பார்கள். இதற்குப் பிறகு, அதிகாரிகளுடன் இரு தலைவர்களும் பங்கேற்கும் பேச்சு வார்த்தை நடைபெறும்.
இந்தப் பேச்சுவார்த்தையானது இரு நாடுகளுக்கிடையிலான பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்கள் மட்டத்திலும் புரிதல் ஏற்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டிருக்கும். பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு, இரு நாடுகளும் இணைந்து, அறிக்கை எதையும் வெளியிட மாட்டார்கள். மாறாக, இரு நாடுகளின் சார்பில் தனித் தனியே அறிக்கைகள் வெளியிடப்படும்.
இந்தப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, சென்னையிலிருந்து சீன அதிபர் தன் விஜயத்தை முடித்துக்கொண்டு புறப்படுகிறார்.இந்த விஜயத்தின்போது இரு தலைவர்களும் சுமார் 6 மணி நேரம் ஒன்றாக இருப்பார்கள்.