அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் இந்து அமைப்புகளுக்கே சொந்தம் - உச்சநீதிமன்றம் வரலாற்றுத் தீர்ப்பு...
பிரசுரிக்கபட்ட திகதி: 09/11/2019 (சனிக்கிழமை)
அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 நிலம் யாருக்குச் சொந்தம் என்பது குறித்த வழக்கில் இன்று தீர்ப்பு அளித்த தலைமை நீதிபதி கோகாய், நீதிபதிகள் பாப்டே, சந்திரசூட், அசோக் பூஷண், அப்துல் நசீர் ஆகிய 5 நீதிபதிகளும் ஒருமனதாக தீர்ப்பளித்துள்ளனர். அதில், காலியாக இருந்த இடத்தில் பாபர் மசூதி கட்டப்படவில்லை என்றும், மசூதிக்கு கீழே இருந்த கட்டுமானம் இஸ்லாமிய கட்டுமானம் அல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான ஆவணங்களை தொல்லியல் துறை அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ள நீதிமன்றம், தொல்லியல் துறையின் ஆதாரங்களை ஒதுக்கி விட முடியாது என்று குறிப்பிட்டுள்ளது.பாபர் மசூதி இருந்த இடம் தங்களுடையதுதான் என இஸ்லாமிய அமைப்புகள் நிரூபிக்கவில்லை என தனது உத்தரவில் தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், எனினும், சர்ச்சைக்குரியதாக இருந்த இடத்தில் இரு மதத்தினரும் வழிபாடு நடத்தி உள்ளதாகத் தெரிவித்துள்ளது. அயோத்தியில் ராமர் பிறந்ததாக இந்து சாஸ்திரங்கள் கூறுவதை சுட்டிக்காட்டியுள்ள உச்சநீதிமன்றம்,ஆங்கிலேயர் வருகைக்கு முன்பே, அயோத்தியில் ராமர், சீதை வழிபாடு நடந்ததற்கான ஆதாரங்கள் உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
சர்ச்சைக்குரியதாக இருந்து வந்த 2.77 ஏக்கர் நிலம் இந்துக்களுக்கே சொந்தம் என்று அறிவித்த உச்சநீதிமன்றம், அங்கு ராமர் கோயில் கட்ட 3 மாதத்திற்குள் அறக்கட்டளை அமைக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அயோத்தியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த மாற்று இடம் வழங்கப்படும் என்றும், இதற்காக, 5 ஏக்கர் நிலம் வழங்கப்படுவதை மத்திய அரசும், உத்தரப்பிரதேச அரசும் உறுதிசெய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்