ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் கோட்டாபாய, முன்னாள் அதிபர் ராஜபக்ஷவின் சகோதரர் ஆவார்.
இவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஐக்கிய தேசிய முன்னணி வேட்பாளரான சஜித் பிரேமதாசா இலங்கை முன்னாள் பிரதமர் பிரேமதாசாவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் சனிக்கிழமை நடைபெற்ற எட்டாவது அதிபர் தேர்தலில் இலங்கையின் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபஷ தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பை அடுத்து தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றி என்பது தமிழர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்கிறார் திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி.
''எந்த சிங்களவர் தேர்வாகியிருந்தாலும் தமிழர்களின் நலன் குறித்து யோசிக்கவேண்டியிருக்கும். ஆனால் கோட்டாபய தேர்வாகியுள்ளது தமிழர்களுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. தனக்கு எதிராக வாக்களித்த தமிழர்களை அவர் எப்படி நடத்துவார் என்ற அச்சம் உள்ளது. ஆனால் சர்வதேச நாடுகளில் உள்ள தமிழர்கள் தொடர்ந்து குரல்கொடுப்பதால், அந்த அரசாங்கங்களின் எதிர்ப்பு கோட்டபாயவுக்கு இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்,'' என்றார்.
இலங்கை அதிபர் தேர்தலில் எது நடக்கக் கூடாது என்று தமிழர்கள் வேண்டினார்களோ அது நடந்து விட்டது என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
''இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், ஈழத் தமிழர்களின் எதிர்காலப் பாதுகாப்பு கருதி, எது நடக்கக்கூடாது என்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் வேண்டினார்களோ, அது நடந்து விட்டது. தமிழினத்தின் எதிரியான கோட்டாபய ராஜபக்ஷ அமோக வெற்றி பெற்று இலங்கையின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது இலங்கையில் அமைதியை ஏற்படுத்த எந்த வகையிலும் உதவாது,''எனத் தெரிவித்துள்ளார்.
தமிழர்களின் நலன் காக்கப்படும் எனப் பிரசாரம் செய்த சஜித் பிரேமதாசாவின் தோல்வி ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது எனக் கூறிய மதிமுக தலைவர் வைகோ, தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள இந்த நாள் தமிழர்களுக்கு மோசமான நாள் எனத் தெரிவித்துள்ளார். மேலும் சர்வதேச தமிழர் அமைப்புகள் இலங்கைத் தமிழர்களின் பாதுகாப்பு மற்றும் நலனில் அக்கறையுடன் செயல்படவேண்டும் தெரிவித்துள்ளார். கடுமையான காலங்களைக் கடந்துவந்த தமிழினம் காக்கப்படவேண்டும் என்றார்.
அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தமிழர்களின் பாதுகாப்புக்குத் தமிழக அரசு தொடர்ந்து குரல்கொடுக்கும் என்றார். ''நம் தொப்புள்கொடி உறவாக இருக்கக்கூடிய தமிழர்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்பதுதான் முக்கியம். தமிழர்கள் இலங்கையில் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் இருக்க அதிமுக அரசு தொடர்ந்து முயற்சி எடுக்கும்,'' எனத் தெரிவித்தார்.