இலங்கையில் மற்றுமொரு நபருக்கு கொரோனா வைரஸ் உறுதியானது
பிரசுரிக்கபட்ட திகதி: 12/03/2020 (வியாழக்கிழமை)
குறித்த நபர் கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு உள்ளாகி கொழும்பு ஐ.டி.எச். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மத்தேகொட பகுதியைச் சேர்ந்த நபருடன் தொடர்பில் இருந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.
44 வயதுடைய குறித்த நபரும் தற்பொழுது அங்கொடையிலுள்ள IDH தொற்று நோய் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார் என அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று இலங்கையிலும் பரவியுள்ளது. கொரோனாவினால் பாதிக்கப்பட்ட முதல் இலங்கையர் நேற்று அடையாளம் காணப்பட்டிருந்தார். குறித்த நபர் I.D.H மருத்துவமனையில் தற்போது சிகிச்சைப் பெற்று வருகிறார்.
மேலும் அந்த நபர் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதியாகியது.
சுற்றுலாத்துறை வழிகாட்டியாக பணியாற்றும் 50 வயதான அவர், இத்தாலியைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் சிலருடன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சேர்ந்து பயணித்துள்ளார். இதன்போதே, அவர் தொற்றிற்கு இலக்காகியிருக்கலாமென நம்பப்படுகிறது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு உள்ளாகி உள்ள மற்றுமொரு நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.