கோவிட்-19 நெருக்கடிக்கு உதவ கிறிஸ்தவ மருத்துவமனைகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 27/03/2020 (வெள்ளிக்கிழமை)
இந்தியாவில் கொரோனா தொற்றுக்கிருமி பரவலைத் தடுப்பதற்கு மத்திய அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கு, இந்திய கிறிஸ்தவ மருத்துவமனைகள் கூட்டமைப்பு, தங்களின் மருத்துவமனைகளையும், பணியாளர்களையும் கொடுத்து உதவ முன்வந்துள்ளது.
இந்திய கிறிஸ்தவ மருத்துவமனைகள் கூட்டமைப்பு, பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு எழுதிய மடலில், கொரோனா தொற்றுக்கிருமி பரவலைத் தடுக்கும் நடவடிக்கையில் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கும் விதமாக, இந்தியாவிலுள்ள ஆயிரம் கிறிஸ்தவ மருத்துவமனைகள் மற்றும், அறுபதாயிரத்திற்கு அதிகமான நோயாளர் படுக்கை வசதிகள் பயன்படுத்தப்பட தயாராக இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.
இந்திய கிறிஸ்தவ மருத்துவமனைகள் கூட்டமைப்பின் தலைவரான, உலக மீட்பர் சபையின் அருள்பணி மத்யூ ஆபிரகாம் அவர்கள், மார்ச் 26, இவ்வியாழனன்று, பிரதமர் மோடி அவர்களுக்கு எழுதிய மடலில், கோவிட்-19 முன்வைக்கும் சவால்களை எதிர்கொள்ள பிரதமரும், நாடும் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு, தன் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்துள்ளார்.
இந்தக் கொள்ளை நோய்க்கு எதிரான நடவடிக்கையில் நாட்டு மக்களின் உடல் நலம் மற்றும், நல்வாழ்வுக்கு, எவ்வளவு சிறப்பான வழிகளில் ஒத்துழைக்க முடியுமோ அவ்வளவுக்கு கிறிஸ்தவ மருத்துவமனைகள் ஒத்துழைப்பு வழங்கத் தயாராக உள்ளன என்று, அருள்பணி ஆபிரகாம் அவர்கள், பிரதமர் மோடி அவர்களுக்கு எழுதிய மடலில் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய கத்தோலிக்க நலவாழ்வு கழகத்தின் செயலராகவும் பணியாற்றும் அருள்பணி ஆபிரகாம் அவர்கள், இந்தியாவில் எந்த தேசிய இடர்கள் அல்லது நெருக்கடியின் போதும், கோவிட்-19 கிருமி ஆபத்தின்போதும் அவற்றுக்கு எதிரான செயல்பாடுகளில் கிறிஸ்தவ சமுதாயம் எப்போதும் முன்னணியில் நிற்கின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மார்ச் 27, இவ்வெள்ளி காலை நிலவரப்படி, இந்தியாவில் கோவிட்-19 தொற்றுக்கிருமியால் தாக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 735 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை இக்கிருமி தாக்குதலால், 16 பேர் இறந்துள்ளனர். வருகிற ஏப்ரல் 15ம் தேதி வரை, நாட்டில் 21 நாள்கள் ஊரடங்கு முறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. (UCAN)