உள்ளிருப்புக் கட்டுப்பாட்டுச் சட்டம் எதிர்வரும் மே 11ம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்று 20 மணி 02 நிமிடத்திற்கு ஆரம்ப்பித்த எமானுவல் மக்ரோனின்; உரையின் முக்கிய விடயமாக, மே 11ம் திகதி வரையான உள்ளிருப்புக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் நீட்டிப்புத் தொடர்பாகவும,; அதன் பின்னரான நடவடிக்கைகள் தொடர்பாகவும் அமைந்திருந்தது.
மே 11 வரை மிகக் கடுமையாக உள்ளிருப்பானது கண்காணிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 11 இற்கிடையில் கொரோனா அறிகுறிகள் தோன்றியவர்களும், மிகவும் பலவீனமான நீண்ட கால நோய் உள்ளவர்களிற்கும், மருத்துவப் பணியாளர்களிற்குமான கொரோனாப் பரிசோதனை செய்து முடிக்கப்படும் எனவும், ஒவ்வொரு கிராமத்தின், ஒவ்வொரு நகரத்தின் இரத்தப் பரிசோதனை செய்யும் ஆய்வுகூடங்களிலும், கொரோனாவிற்கான சோதனைகள் செய்யும் வசதிகள் செய்து தரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நோய் அறிகுறி தோன்றாத பிரான்சின் குடிமக்கள் அனைவரிற்கும் கொரோனாப் பரிசோதனை தேவையற்றது என்பதையும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மே 11 இன் பின்னர், நிலைமைகளின் அடிப்படையில், பாடசாலைகளை படிப்படியாக ஆரம்பிப்பது தொடர்பாக முடிவுகள் எடுக்கப்படும் எனவும், முக்கிய பணிகள், வேலைகள் மீண்டும் படிப்படியாக ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், உணவகங்கள், அருந்தகங்கள், திரையரங்குகள், நிகழ்வு மண்டபங்கள் போன்ற மக்கள் கூடும் இடங்கள் எல்லாம் தொடர்ந்தும் தடை செய்யப்படும் எனவும், இந்தத் தடை ஜுலை வரை நீடிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களிற்கான நிதியாதாரங்கள், பகுதி வேலையிழப்பு ஊதியங்கள், வறியவர்களிற்கான உதவித்தொகைகள், நிறுவனங்களிற்கான சலுகைகள்,உதிவித் தொகைகள் போன்றவை, தொடர்ச்சியாக வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி எமானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.