கொரோனா வைரஸை அழிக்கும் நவீன இயந்திரம் கண்டுபிடிப்பு!
பிரசுரிக்கபட்ட திகதி: 11/11/2020 (புதன்கிழமை)
டெக்ஸாஸ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ள இக் கருவிக்கு நானோ வேவ் டிவைஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட அறையில் வைக்கப்படும் இக் கருவியானது காற்றை உள்ளிழுத்து புற ஊதாக் கதிர்களால் சுத்திகரித்து மீண்டும் காற்றினை வெளியிடுகிறது.
இதனால் காற்றில் பரவும் அனைத்து வகையான வைரஸ்களும் உள்ளிழுக்கப்பட்டு அழிக்கப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் செக்கனுக்கு 2000 கிருமிகளைக் கொல்வதாக தெரிவித்துள்ள அவர்கள் இதன் மூலம் 99.99 வீத காற்று சுத்திகரிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த கருவி நான்கு மோட்டர்களை கொண்டுள்ளது. இது 300 லிற்றர் வரை காற்றை இழுக்கிறது மற்றும் கொரோனா வைரஸ் கொண்ட காற்றை 10 அடிக்கு மேல் தள்ளும் திறன் கொண்டுள்ளது.
நானோ வேவ் டிவைஸ் எனப்படும் இந்த கருவி யூனிட் ஒன்றிற்கு 3,450 அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. தற்போது இந்த கருவி சந்தைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த கருவி தொடர்பில் டெக்சாஸ் பல்கலைக்கழகம், மருத்துவக் கிளை மற்றும் கொலராடோ பல்கலைக்கழகம் ஆகியவைகள் இணைந்து ஆய்வக சோதனைகளை நடத்தியுள்ளது. அதில் 99 சதவிகிதம் வைரஸ் காற்றில் இருந்து செயலிழக்க செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸை செயலிழக்கச் செய்வதற்கான முதல் சாத்தியமான கருவிகளில் ஒன்றாக இந்த கருவி உருவாக்கப்பட்டுள்ளளதாக பல்கலைக்கழகத்தின் அறிவியல் மற்றும் பொறியியல் பேராசிரியர் எலியாஸ் டோவ் தெரிவித்துள்ளார்.
இந்த கருவி தனித்துவமான சில திறன்களை கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதனை தாம் வெற்றிகரமான கருவியாக கருதுவதாக அவர் குறிப்பிட்டுள்ளளார்.
கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு சீனாவின் வுஹானில் பரவ ஆரம்பித்த நிலையில் உலகின் ஒவ்வொரு நாட்டிலும் விரைவாக பரவியுள்ளது.
விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கும், மருந்து ஒன்றை கண்டுபிடிப்பதற்கும் தீவிரமாக போராடி வருகின்றனர்.
கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்த போது புற ஊதா கதிர்கள் மூலம் கொரோனா வைரஸை அகற்ற முடியும் என்று தகவல்கள் வெளியாகியது, ஆனால், சரியான கருவி இல்லாமல், பல வல்லுநர்கள் இதனை சோதிப்பதற்கு தயங்கியுள்ளனர்.
இந்த கருவியை தயாரிக்க ஆரம்பித்த போது, பலரும் இதனை ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் காற்றில் உள்ள வைரஸ் தொற்றினை செயலிழக்க செய்ய முடியாதென பலரும் கூறினார்கள். ஆனால் எங்கள் தீவிர முயற்சியில் இந்த கருவி வெற்றிகரமாக தயாரிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.