இளவரசர் ஃபிலிப் 99 வயதில் காலமானார், பக்கிங்காம் அரண்மனை அறிவிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 09/04/2021 (வெள்ளிக்கிழமை)
"மாட்சிமை வாய்ந்த இளவரசரின் உயிர் இன்று காலை வின்சர் கோட்டையில் அமைதியான முறையில் பிரிந்தது," என்று அரண்மனை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் வரலாற்றில் நீண்ட காலம் வாழ்ந்த அரச குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்த எடின்பரோ கோமகன், கடந்த மார்ச் மாதம் 16ஆம் தேதி மருத்துவமனையில் ஒரு மாதம் சிகிச்சை பெற்ற பிறகு வின்சர் கோட்டைக்கு திரும்பினார்.
அவரது மறைவு தொடர்பாக பக்கிங்காம் அரண்மனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தனது நேசத்துக்குரிய கணவர், எடின்பரோ கோமகன் இளவரசர் ஃபிலிப் இறந்து விட்டார் என்ற தகவலை மாட்சிமை பொருந்திய அரசி ஆழ்ந்த வருத்தத்துடன் வெளியிட்டுள்ளார்," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1947ஆம் ஆண்டில் இளவரசி எலிசபெத் அரசியாவதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக அவரை இளவரசர் திருமணம் செய்து கொண்டார். பிரிட்டிஷ் அரச குடும்ப வரலாற்றில் நீண்ட காலம் சேவையாற்றியவர் அவர்.
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், "எண்ணற்ற இளைஞர்களால் ஈர்க்கப்பட்டவர் இளவரசர்," என்று கூறியுள்ளார். பிரதமர் இல்லம் அமைந்த டெளனிங் வீதியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பிரிட்டனில் பல தலைமுறை மக்களிடமும் காமன்வெல்த் நாடுகளிலும் உலக அளவிலும் அன்பைப் பெற்றவர் அவர்," என்றும் கூறினார்.
கோமகனின் மறைவுச் செய்தியைத் தொடர்ந்து பக்கிங்காம் அரண்மனையின் கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. அவரது இறப்புச் செய்தி அடங்கிய நோட்டீஸ்கள், வாயில்களில் ஒட்டப்பட்டிருந்தன.
அரண்மனைக்கு வெளியே மக்கள் மலர் கொத்துகளை வைத்து அஞ்சலி செலுத்த, நூற்றுக்கணக்கானோர் வின்சர் கோட்டையைப் பார்வையிட்டு மரியாதை செலுத்தினர்.
எனினும், கொரோனா பெருந்தொற்று காரணமாக, அத்தகைய மலர் கொத்துகளை அரச குடும்பத்து மாளிகை பகுதிகளில் விட்டுச் செல்ல வேண்டாம் என பொதுமக்களை அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
பூங்கொத்துகளை விடுவதற்கு பதிலாக, கோமகனின் நினைவாக அறக்கட்டளை பணிகளுக்கு நன்கொடை அளிக்குமாறு அரச குடும்பம் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், பொதுமக்கள் இரங்கல் தெரிவிக்க வசதியாக, அரச குடும்பத்து இணையதள பக்கத்தில் இரங்கல் பதிவிடும் வகையில் இணைய பக்கம் திறக்கப்பட்டுள்ளது.
இறுதி நிகழ்ச்சி எப்போது?
இளவரசர் ஃபிலிப்பின் இறுதி நிகழ்ச்சி, வின்சர் கோட்டையில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டாலும், அது கொரோனா பரவலை கவனத்தில் கொண்டு மேற்கொள்ளப்படும் என அரச குடும்பத்து காரிய சேவை பணிகளை கவனிக்கும் அமைப்பான காலேஜ் ஆஃப் ஆர்ம்ஸ் தெரிவித்துள்ளது.
அரசு முறை இறுதி நிகழ்வாக கோமகனின் இறுதி நிகழ்வு இருக்காது என்றபோதும், அவரது விருப்பத்தின்படி உரிய சடங்குகளுடன் நடத்தப்படும் என்றும் காலேஜ் ஆஃப் ஆர்ம்ஸ் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இளவரசர் ஃபிலிப், கிரேக்க தீவான கோர்ஃபுவில் 1921ஆம் ஆண்டு ஜூன் 10ஆம் தேதி பிறந்தார்.