நடிகர் விவேக்: கால் நூற்றாண்டு தமிழ்நாட்டை கலகலப்பாக்கியவர்
பிரசுரிக்கபட்ட திகதி: 17/04/2021 (சனிக்கிழமை)
தமிழ் சினிமாவில் காளி என். ரத்தினத்தில் துவங்கும் நீண்ட நகைச்சுவை நடிகர்களின் பட்டியலில் விவேகானந்தன் என்ற விவேக்கின் பெயர் தனித்துவமான ஒன்று. 1970களின் பிற்பகுதியில் துவங்கி மெல்லமெல்ல உச்சம்பெற்ற கவுண்டமணி - செந்தில் ஜோடி 90களின் முற்பகுதியில் சற்று சோர்ந்து போன சமயத்தில், வேறு ஒரு ஜோடி அந்த இடத்தை நிரப்ப ஆரம்பித்தது. விவேக்கும் வடிவேலுவும்தான் அந்த ஜோடி.
இதில் வடிவேலுவுக்கு சில ஆண்டுகள் முன்பாகவே சினிமாவில் அறிமுகமானவர் விவேக். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படிப்பை முடித்து சென்னையில் அரசுப் பணியில் இருந்த விவேக்கிற்கு நடிப்பின் மீதும் நகைச்சுவையின் மீதும் பெரும் ஆர்வம் இருந்துவந்தது. மெட்ராஸ் ஹ்யூமர் க்ளப்பில் இணைந்து செயல்பட்ட விவேக்கிற்கு ஒரு கட்டத்தில் இயக்குநர் கே. பாலச்சந்தரின் அறிமுகம் கிடைக்க, அவரது வாழ்வில் வேறு ஒரு கதவு திறந்தது.
1987ல் பாலச்சந்தர் இயக்கி வெளிவந்த மனதில் உறுதி வேண்டும் திரைப்படத்தில் சுஹாசினி நடித்த நந்தினி என்ற பாத்திரத்தின் தம்பியாக அறிமுகமான விவேக், முதல் படத்திலேயே கவனத்தைக் கவர்ந்தார். அந்தப் படத்தில் விவேக் தவிர, மேலும் பலர் அறிமுகமானாலும் தமிழ் சினிமாவில் ஒரு நீண்ட இன்னிங்ஸை விளையாடியவர் அவர் மட்டும்தான்.
இதற்கு அடுத்த படமான புதுப்புது அர்த்தங்கள் படத்திலும் மீண்டும் வாய்ப்பளித்தார் கே. பாலச்சந்தர். அந்தப் படத்தில் விவேக் பேசிய 'இன்னைக்குச் செத்தா நாளைக்குப் பால்' என்ற வசனத்தை இன்றும் நினைவுகூர்கிறார்கள் பலர்.
அதற்குப் பிறகு, ஒரு வீடு இரு வாசல், கேளடி கண்மணி என அவரது திரையுலகப் பயணம் வேகம் எடுத்தது. ஆனால், அவருடைய சிறந்த ஆண்டுகள் என்றால், தொன்னூறுகளின் பிற்பகுதியும் இந்த நூற்றாண்டின் முதல் பத்து வருடங்களும்தான்.
வீரா, உழைப்பாளி போன்ற ரஜினிகாந்த் படங்களில் அவர் நடித்துவிட்டாலும், அதில் கிடைத்த அடையாளத்தைவிட காதல் மன்னன், வாலி, கண்ணெதிரே தோன்றினால், பூ மகள் ஊர்வலம் போன்ற படங்களில்தான் தனக்கான தனித்துவம் மிக்க அடையாளத்தை உருவாக்க ஆரம்பித்தார் விவேக்.
இதற்குப் பிறகுதான் அவருடைய உச்சகட்ட சாதனைகளை நிகழ்த்த ஆரம்பித்தார். விஜய் நடித்த குஷி, மாதவன் நடிப்பில் மின்னலே, டும்...டும்...டும்..., ரன், விக்ரம் நடிப்பில் தூள், சாமி ஆகிய படங்கள் அவரை வேறு ஒரு உயரத்தில் கொண்டு நிறுத்தின.
இதன் மூலம் இந்திய சினிமாவில் வேறு எந்த மொழித் திரைப்படங்களிலும் இல்லாத விதமாக, நகைச்சுவை என்பது தமிழ் சினிமாவின் ஒரு அங்கமாகிப்போனது. இவர்கள் ஏற்று நடித்த பாத்திரங்கள், அவர்கள் பேசிய வசனங்கள் ஆகியவை தமிழ் வாழ்வில் நகரம் - கிராமம், ஏழை - பணக்காரன் என்ற வித்தியாசமின்றி பரவ ஆரம்பித்தது.
பெரும்பாலும் கதாநாயகர்களின் நண்பராகவே வந்துபோய்க்கொண்டிருந்த விவேக் ஒரு கட்டத்தில் தனக்கென ஒரு பாணியை வகுத்துக்கொள்ள ஆரம்பித்தார். அவரது வசனங்களில் சில இடங்களில் பகுத்தறிவுக் கருத்துகளைப் பேச ஆரம்பித்தார். இது இவருக்கு சின்னக் கலைவாணர் என்ற பட்டத்தையும், வடிவேலுவின் நகைச்சுவையிலிருந்து ஒரு மாறுபட்ட பாணியையும் கொடுத்தது. குறிப்பாக மூட நம்பிக்கைகளுக்கு எதிராக அவர் தொடர்ந்து தனது படங்களில் பேசிவந்தார்.
இவர் நடித்த பல படங்களில் இவரது காமெடி காட்சிகளை நீக்கிவிட்டால், அந்தப் படத்தையே பார்க்க முடியாது என்பது போன்ற படங்கள் எல்லாம் உண்டு. சில படங்கள் எடுத்து முடிக்கப்பட்ட பிறகு, அவை விற்பனையாகாத நிலையில், தனியாக விவேக்கின் காமெடியை எடுத்து, சேர்த்து விற்பனை செய்யப்பட்டு வெற்றிபெற்ற படங்களும் உண்டு.
"விவேக்கின் காமெடி என்பது யாரையும் புண்படுத்தாத நகைச்சுவை. அதன் மூலம் அவர் பகுத்தறிவுக் கருத்துகளையும் சொன்னார். என்.எஸ். கிருஷ்ணனைப் போல அந்தக் கருத்துகளை யாரையும் புண்படுத்தாமல் சொன்னார் என்பதுதான் முக்கியம்" என்கிறார் சினிமா ஆய்வாளரான தியடோர் பாஸ்கரன்.
தமிழ் சினிமாவின் துவக்க காலங்களிலும் 50கள், 60களிலும் வெளிவந்த திரைப்படங்களின் நகைச்சுவைக் காட்சிகளை இப்போது பார்த்தால் புன்சிரிப்புகூட எழாது. ஆனால், கவுண்டமணி, வடிவேலு, விவேக் காலகட்டத்தின் நகைச்சுவை தீராத மகிழ்ச்சியை தன்னகத்தே கொண்டிருந்தது. வேறு மொழிகளில் இல்லாதவகையில் தமிழில் மட்டுமே நகைச்சுவைக் காட்சிகளுக்காக இயங்கிவரும் இரண்டு தொலைக்காட்சிகள் இதற்குச் சான்று.
நான்தான் பாலா, வெள்ளைப் பூக்கள் போன்ற சில படங்களில் தனியாக கதாநாயகனாக நடித்திருக்கிறார் என்றாலும் பிற நடிகர்களுடன் சேர்ந்து முன்னணி பாத்திரமாக அவர் நடித்த பொங்கலோ பொங்கல், விரலுக்கேத்த வீக்கம், நம்ம வீட்டுக் கல்யாணம், மிடில் கிளாஸ் மாதவன், விஸ்வநாதன் - ராமமூர்த்தி ஆகிய படங்கள் அவரை ஒரு சிறந்த நடிகராக அடையாளம் காட்டின.
உண்மையில் ஆரம்பகாலத்தைவிட, அவரது திரைவாழ்வின் பிற்பகுதியில்தான் அவரது சிறந்த திரைப்படங்கள் வெளிவந்தன. தனுஷ் நடித்த படிக்காதவன், உத்தமபுத்திரன் போன்ற படங்களில் நகைச்சுவையின் உச்சத்தைத் தொட்டிருந்தார் விவேக்.
திரைக்கலைஞர் என்பதைத்தாண்டி, சமூக ஆர்வலர் என்ற முகமும் விவேக்கிற்கு உண்டு. மறைந்த குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாமுடன் ஏற்பட்ட நெருக்கம் அவரை மரம் நடுதலில் ஆர்வம்கொள்ளச் செய்தது. தமிழ்நாடு சந்திக்கும் பல்வேறு அம்சங்கள் குறித்து அவர் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்திவந்தார்.
தமிழின் பெரும்பாலான கதாநாயகர்களுடன் இணைந்து நடித்துவிட்டாலும், கமல்ஹாசனுடன் அவர் நடித்ததில்லை. கமல் தற்போது நடித்துவரும் இந்தியன் - 2 படத்தில் அவர் நடிப்பதாக அறிவித்திருந்தார். ஆனால், படம் வெளியாவதற்குள் இறந்துபோயிருக்கிறார் விவேக்.
தமிழ் சமூகத்தைப் பொறுத்தவரை, திரைப்பட நகைச்சுவை என்பது தினசரி வாழ்வின் ஒரு அங்கம். தன்னுடைய மகிழ்ச்சி, துயரம், பிரச்சனைகள் அனைத்தையுமே திரைப்பட வசனங்களின் மூலமும் காட்சிகளின் மூலமும் வெளிப்படுத்தும் சமூகம் இது. அந்த வகையில் பார்க்கும்போது, விவேக் தொடர்ந்து தனது காட்சிகளின் மூலம் சிரிக்கவைத்துக்கொண்டே இருக்கிறார். மரணம் அவரை ஒருபோதும் தீண்டுவதில்லை.