இந்தியாவின் முப்படை தலைமை தளபதி மரணம்.யார் இந்த பிபின் ராவத்?
பிரசுரிக்கபட்ட திகதி: 08/12/2021 (புதன்கிழமை)
பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் 11 பேர் இன்று குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.க்ரூப் கேப்டன் வருண் சிங் எனும் விமானப்படை அதிகாரி இப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு படைகளின் ஊழியர்களுக்கான கல்லூரியில் நடக்க இருந்த ஒரு நிகழ்வுக்காக பிபின் ராவத் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்துள்ளது.பிபின் ராவத் மற்றும் பிறரின் மரணத்துக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோதி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
யார் இந்த பிபின் ராவத்?
பிபின் லக்ஷ்மன் சிங் ராவத் 1958ஆம் மார்ச் மாதம் 16ஆம் தேதி பிறந்தார். அவர் பிறந்த ஊர் இப்போதைய உத்தராகண்ட் மாநிலத்தில் இருக்கும் பௌடி.
இந்தியாவின் முதல் முப்படை தலைமைத் தளபதியாக ஜெனரல் பிபின் ராவத் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நியமிக்கப்பட்டார். அதற்கு முன் இந்திய ராணுவத் தளபதியாக இவர் இருந்தார்.
ஜெனரல் பிபின் ராவத், சிம்லாவில் உள்ள செயிண்ட் எட்வர்ட் பள்ளியில் படித்தார். பின்னர் கடக்வாஸ்லாவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் படித்தார். அவர் 1978-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் டேராடூனில் உள்ள இந்திய ராணுவ பயிற்சி அகாடமியில் உள்ள பதினோராவது கூர்கா ரைஃபிள்ஸ் பிரிவின் ஐந்தாவது படையணியில் சேர்ந்தார். அவருடைய தந்தை இருந்த அதே பிரிவில் அவர் தன் ராணுவப் பயணத்தைத் தொடங்கினார்.
டேராடூனில் உள்ள இந்திய ராணுவ பயிற்சி நிலையத்தில் இந்திய ராணுவ இயக்குநரகத்தின் தலைமை அதிகாரி உட்பட பயிற்சி அளிக்கும் பொறுப்பை அவர் வகித்தார். மத்திய பிராந்தியத்தில் தளவாடங்கள் பிரிவு அலுவலராக அவர் பணியாற்றினார். ராணுவ செயலர் பிரிவில், துணை ராணுவ செயலாளர் மற்றும் கர்னல் அந்தஸ்தில் ராணுவ செயலாளராக பிபின் ராவத் பணியாற்றினார்.
வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு சேவை உயரதிகாரிகளுக்கான பயிற்சிக் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்த பிபின் ராவத், தேசிய பாதுகாப்பு கல்லூரியிலும் பல்வேறு பிரிவுகளில் தேர்ச்சி பெற்றார். அமெரிக்காவின் ஃபோர்ட்லீவன்வொர்த்தில் உள்ள ராணுவ தளபதிகளுக்கான பயிற்சி வகுப்புகளிலும் பிபின் ராவத் பங்கெடுத்துள்ளார்.
ஜெனரல் பிபின் ராவத், தேசிய பாதுகாப்பு மற்றும் தலைமைப் பண்பு குறித்து பல்வேறு கட்டுரைகளை எழுதியுள்ளார். அது பல பத்திரிக்கைகளில் வெளியாகியுள்ளது. சென்னை பல்கலைகழகத்தில் பாதுகாப்பு குறித்த படிப்பில் அவருக்கு எம்.ஃபில் பட்டம் வழங்கப்பட்டது. மேலாண்மை மற்றும் கணினி அறிவியலில் பட்டயப்படிப்பை முடித்துள்ளார்.
அதி உயரத்தில் நிகழும் போர்முறைகளில் அதிக அனுபவம் கொண்டவர். யூரி, ஜம்மு & காஷ்மீர் ஆகிய பகுதிகளில் மேஜராகப் பணியாற்றியுள்ளார். ப்ரிகேடியராக பதவி உயர்வு பெற்றபிறகு, சர்வதேச படைப்பிரிவுக்குத் தலைமையேற்று காங்கோ குடியரசில் நடைபெற்ற ஆபரேஷன்களை (MONUSCO) நடத்தினார். அதற்காக இரண்டு முறை ஃபோர்ஸ் கமாண்டர் கமெண்டேஷன் விருது பெற்றார்.
அந்த ஆபரேஷனுக்காக காங்கோவிற்கு அனுப்பப்பட்ட இரண்டு வாரங்களிலேயே, அவருடைய படை கிழக்கிலிருந்து கடுமையான தாக்குதலை எதிர்கொண்டது. வடக்கு கிவு, கோமா ஆகிய பகுதிகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின.
அதில், தன்னுடைய ராணுவ தந்திரத்தின் மூலம் காங்கோ படைகளுக்கு உதவினார். அதோடு, உள்ளூர் மக்களோடு ஒருங்கிணைந்து செயல்பட்டதன் மூலம் அவர்களுடைய பாதுகாப்பையும் உறுதி செய்ததில் இவருடைய பங்கு குறிப்பிடத்தக்கது. நான்கு மாதங்களுக்கு நீண்ட இந்த ஆபரேஷனில், ராவத் மற்றும் அவருடைய படையின் முழு ஆற்றலும் வெளிப்பட்டது. அவருடைய தலைமைப்பண்பு, துணிச்சல், அனுபவம் ஆகியவை வெற்றிக்கும் அடிகோலியது.
31 டிசம்பர், 2016 அன்று ராணுவ தலைமைத் தளபதியாகப் பதவியேற்றார். இதன்மூலம், கூர்கா படையிலிருந்து ராணுவ தலைமைத் தளபதியாகப் பதவியேற்ற முதல்அதிகாரி என்ற பெருமையையும் பெற்றார். அதோடு, 2017-ம் ஆண்டிலிருந்து நேபாள ராணுவத்தின் கௌரவத் தளபதியாகவும் இருந்து வருகிறார்.
1987-ம் ஆண்டு பிபின் ராவத்தின் படை, சும்டொரோங் ச்சூ பள்ளத்தாக்கில் சீன ராணுவத்தை நேருக்கு நேராக எதிர்கொண்டது.
2015-ம் ஆண்டு ஜூன் மாதம், மணிப்பூரில் மேற்கு தென்கிழக்கு ஆசியாவின் ஐக்கிய விடுதலை முன்னணியின் (United National Liberation Front of Western South East Asia) படையினரால் நடத்தப்பட்ட தாக்குதலில் 18 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டார்கள். அதற்கான இந்திய ராணுவத்தின் எதிர்வினையில், பிபின் ராவத் தலைமையில், 21-வது படைப்பிரிவின் பாராசூட் படை ராணுவ ஆபரேஷனை மேற்கொண்டது.
அவருடைய 40 ஆண்டுகளுக்கும் மேலான ராணுவப் பணியில், பரம் விஷிஸ்ட் சேவா, உத்தம் யுத் சேவா, அதி விஷிஸ்ட் சேவா, யுத் சேவா, சேனா, விஷிஸ்ட் சேவா, சிறப்புச் சேவை விருது, ஆபரேஷன் பராக்ரம், சைன்ய சேவா உட்படப் பல பதக்கங்களைப் பெற்றுள்ளார்.
1978-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதியன்று அவருடைய தந்தை பணியாற்றிய படையிலேயே இரண்டாவது லெப்டினென்ட்டாகப் பதவியேற்றவர், லெப்டினென்ட் (1980), கேப்டன் (1984), மேஜர் (1989), லெப்டினென்ட் காலனெல் (1998), காலனெல் (2003), ப்ரிகேடியர் (2007), மேஜர் ஜெனரல் (2010), லெப்டினென்ட் ஜெனரல் (2014), தலைமைத் தளபதி (2017), என்று பல்வேறு படிநிலைகளில் உயர்ந்து, 2019-ம் ஆண்டு முப்படைகளுக்குமான தளபதியாகப் பதவி ஏற்றார் பிபின் ராவத்.