சீரற்ற காலநிலை காரணமாக இது வரை 9 பேர் பலியாகியுள்ளதாகவும், 10 பேரை காணவில்லை எனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
காலி, பொத்தல பகுதியில் மின்சார கம்பி வீழ்ந்ததனால் இருவர் (02) பலியானதோடு, அவிஸ்ஸாவளை பகுதியில் மண்மேடு ஒன்று சரிந்துவீழ்ந்ததில் இருவர் (02) மரணமடைந்ததோடு சிறுமி ஒருவரை (01) காணாமல் போயிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வத்தளை வீடொன்றிலிருந்த 8 மாத குழந்தை ஒன்று திடீரென ஏற்பட்ட வெள்ள நீரின் தாக்குதலால் மரணமடைந்துள்ளது.
எம்பிலிபிட்டிய, கங்கயாய பகுதியில் மின்சாரம் தாக்கியதன் காரணமாக இருவர் பலியாகியுள்ளனர்.
கேகாலை, தெஹியோவிட்ட பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக காணாமல்போன இருவரின் சடலங்கள், இன்றைய தினம் (16) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நீர்கொழும்பு கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ஐவரை காணவில்லை என்பதோடு கடற்படையினர் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் மரங்கள் முறிந்து வீழ்ந்தமை, மண்சரிவு, மின்கம்பங்கள் உடைந்து வீழ்ந்தமை போன்றவற்றால், நாட்டின் பல்வேறு இடங்களில் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதோடு, அனர்த்த முகாமைத்துவ நிலையமும், மின்சார சபையும் இணைந்து அதனை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளன.