வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கும் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்குமிடையில் நாளை திங்கட்கிழமை நடைபெறவிருந்த சந்திப்பு திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் விக்னேஸ்வரன் திடீர் சுகயீனம் காரணமாக யாழ். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதையடுத்தே இந்தச் சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வடமாகாண நிலைமை தொடர்பில் இச்சந்திப்பு நடைபெறவிருந்தது. இச்சந்திப்பில் குறிப்பாக காணி சுவீகரிப்பு மற்றும் 65 ஆயிரம் வீட்டுத் திட்டம் குறித்து பேசப்படவிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் முதலமைச்சருக்கு நேற்றுக் காலை திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டதால் அவர் யாழ். ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஆஸ்பத்திரி தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் விளைவாக முதலமைச்சர் கொழும்பு செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டது. இதனால் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இடையில் நடைபெறவிருந்த சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.