மேற்கு வங்கத்தில் மீண்டும் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி 160க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி.
பிரசுரிக்கபட்ட திகதி: 19/05/2016 (வியாழக்கிழமை)
மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள 294 தொகுதிகளில் சுமார் 160க்கும் மேற்பட்ட இடங்களை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கைப்பற்றுகிறது. அக்கட்சித்தலைவர் மம்தா பானர்ஜி மீண்டும் முதல்வராகிறார். மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள 294 தொகுதிகளுக்கும் வாக்குபதிவு ஏப்ரல் 4ம் தேதி தொடங்கி மே 5ம் தேதி வரை 5 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. சுமார் 82.80 சதவீத வாக்குகள் பதிவாகின. 6.55 கோடி வாக்காளர்கள் வாக்களித்தனர். பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று 90 மையங்களில் தொடங்கியது. இதையொட்டி வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஏற்கனவே வாக்குபதிவின் போது பல்வேறு இடங்களிலும் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. எனவே இம்முறை வாக்கு எண்ணிக்கையின் போது கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு 78 கம்பெனி மத்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
90 மையங்களிலும் 394 ஹால்களில் வாக்கு எண்ணிக்கை நடப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 294 வாக்கு எண்ணிக்கை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். பதிவான வாக்குகள் அனைத்தும் இன்று காலை 8 மணிக்கு மூத்த அதிகாரிகள் மற்றும் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் சீல்கள் உடைக்கப்பட்டு எண்ணும் பணி தொடங்கியது. தொடக்கம் முதலே பல்வேறு இடங்களிலும் திரிணாமுல் முன்னிலையில் இருந்து வருகிறது.இம்முறை பிரசாரத்தின் போது திரிணாமுல் மீது பாஜ கடுமையான தாக்குதலை தொடுத்தது. பர்த்வான் குண்டு வெடிப்பு, சாரதா சிட்பண்ட் மோசடி, நாரதா ஸ்டிங் வீடியோ என பரபரப்பாக குற்றச்சாட்டுகளை வீசியது.
மோடிக்கு துணிவிருந்தால் என்னை கைது செய்து பாருங்கள் என வெளிப்படையாக பாஜவுக்கு மம்தா சவால் விட்டார். அதே நேரத்தில் மம்தா நேரடியாக களத்தில் இறங்கி நடைபயணமாக சென்று தனது அதிரடி பிரசாரத்தால் வாக்கு சேகரித்தார். மேலும், அனைத்து தொகுதிகளிலும் திரிணாமுல் தனித்தே களம் கண்டது. இடதுசாரிகள் கேரளாவில் காங்கிரசுடன் எதிரும் புதிருமாக இருந்த போதும் இங்கு கூட்டணி அமைத்து போட்டியில் இறங்கினர். ஆரம்பம் முதலே திரிணாமுலுக்கு இடதுசாரி கட்சிகள் கடும் போட்டியாக இருந்தன. தேர்தல் கருத்து கணிப்புகளிலும் இடதுசாரி கூட்டணி மற்றும் திரிணாமுல் இடையே போட்டி பலமாக காணப்படுவதாக கூறப்பட்டாலும் திரிணாமுல் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டது.
மம்தா போட்டியிடும் பவானிப்பூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் மகள் தீபா தாஸ் முன்ஷி, பாஜ சார்பில் சுதந்திர போராட்ட வீரர் நேதாஜியின் பேரன் சந்திர போஸ் களம் இறக்கப்பட்டனர். இங்கு ஏராளமான வாக்குகள் வித்தியாசத்தில் மம்தா முன்னிலை வகித்து வருகிறார். பகல் 12 மணி நிலவரப்படி மேற்கு வங்கத்தில் 160 இடங்களில் திரிணாமுல் முன்னிலை வகித்து வருகிறது. இடதுசாரிகள், காங்கிரஸ் கூட்டணி 60 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இம்முறை மேற்கு வங்கத்தில் முதன்முறையாக பாஜ கணக்கை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 3 இடங்களில் பாஜ முன்னிலை வகித்து வருகிறது.திரிணாமுல் வெற்றியை தொடர்ந்து பல்வேறு இடங்களிலும் கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். -