நீண்ட காலமாக அரசியலில் உள்ள கட்சிகளை விட கணிசமான வாக்குகளை நாம் தமிழர் கட்சி பெற்றுள்ளது.2 இணைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 19/05/2016 (வியாழக்கிழமை)
சென்னை: தமிழக அரசியல் களத்தில் புதிய கட்சியான நாம் தமிழர் கட்சி எங்குமே முன்னிலையில் இல்லாவிட்டாலும் கூட வாக்குகளைப் பெறுவதில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இக்கட்சிக்கு 1 சதவீத அளவுக்கு வாக்குகள் கிடைத்துள்ளன. என்ன விசேஷம் என்றால் நீண்ட காலமாக அரசியல் களத்தில் ஏதாவது ஒரு வகையில் சக்தியாக திகழ்ந்து வந்த இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் ஆகியோரையும், புதிதாய்ப் பிறந்த தமிழ் மாநில காங்கிரஸையும் பின்னுக்குத் தள்ளியுள்ளது நாம் தமிழர் கட்சி.
இக்கட்சியின் தலைவர் சீமான் தமிழகம் முழுவதும் செய்த தீவிரப் பிரச்சாரம், இவரது கட்சியினர் நடத்தி வந்த தீவிர களப் பணி, இக்கட்சியின் வித்தியாசமான தேர்தல் அறிக்கை உள்ளிட்ட பலவற்றின் காரணாமாக இக்கட்சியும் மக்களின் பார்வையில் விழுந்துள்ளது. கடைசி நிலவரப்படி நாம் தமிழர் கட்சிக்கு 1 சதவீத வாக்கு கிடைத்துள்ளது. அதாவது இதுவரை இக்கட்சிக்கு 1,01,985 வாக்குகள் கிடைத்துள்ளன. இதற்கு அடுத்த இடத்தில் தமாகா (0.8%), சிபிஐ (0.7%), மதிமுக (0.7%), சிபிஎம் (0.7%), விடுதலைச் சிறுத்தைகள் (0.6%) உள்ளன. நீண்ட காலமாக அரசியலில் உள்ள கட்சிகளை விட கணிசமான வாக்குகளை நாம் தமிழர் கட்சி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
2ம் இணைப்பு
தேமுதிக கட்சிக்கு மக்கள் கொடுத்துள்ள அடியை அந்தக் கட்சி சற்றும் எதிர்பார்த்திருக்காது. அந்த அளவுக்கு மரண அடியைக் கொடுத்துள்ளனர். அதை விட அந்தக் கட்சிக்கு பெரிய அதிர்ச்சி என்னவென்றால், தேமுதிகவுக்கு மிக மிக நெருக்கத்தில் நாம் தமிழர் கட்சி வந்து அமர்ந்திருக்கிறது என்பதுதான். தமிழக மக்கள் எப்போதுமே அதிரடியான முடிவுகளைக் கொடுப்பதில் அலாதியனவர்கள். அந்த வகையில் இந்த முறையும் அவர்கள் பலருக்கும் ஷாக் தரும் வகையிலான தீர்ப்பை அளித்துள்ளனர். அதில் பெரிய அதிர்ச்சி தேமுதிவுக்குக் கொடுத்துள்ள ஆப்புதான்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை 3வது இடத்திற்குத் தள்ளி விட்டதோடு அந்தக் கட்சியையும் காலி செய்து விட்டனர். தேமுதிகவின் வாக்கு வங்கி என்ற மாயை சுக்கு நூறாக சிதறிப் போய் விட்டது. வெறும் 2.3 சதவீத வாக்குகளையே பெற்றுள்ளது தேமுதிக. பாஜகவை விட குறைந்த வாக்கு சதவீதம் இது. அதை விட முக்கியமானது நேற்று பிறந்த நாம் தமிழர் கட்சி தேமுதிகவுக்கு அடுத்த இடத்தில், மிக மிக நெருக்கமான நிலையில் வந்திருப்பதுதான். நாம் தமிழர் கட்சிக்கு 1.1 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. சொற்பமான வாக்குதானே என்று குறைத்து மதிப்பிட்டு விட முடியாது இதை. காரணம், தேமுதிகவுக்கு வெகு அருகே வந்து நிற்கிறது இந்தக் கட்சி. தேமுதிக இனியும் சுதாரித்துக் கொண்டு தனது தவறுகளைத் திருத்திக் கொண்டு, மக்களுக்காக பாடுபட முயலாவிட்டால், மேலும் மேலும் விஜயகாந்த்தின் சேஷ்டைகள் தொடர்ந்தால் நிச்சயம் நாம் தமிழர் கட்சி, தேமுதிகவை தூக்கியடித்து விரட்டியடித்து விடக் கூடிய வாய்ப்புகள் நிறையவே உள்ளன.