போரில் ஒரு இலட்சம் பேர் கொல்லப்பட்டமை பெரும் துயர்! - சொல்கின்றார் இலங்கையின் ஜனாதிபதி
பிரசுரிக்கபட்ட திகதி: 19/05/2016 (வியாழக்கிழமை)
இலங்கையில் நடந்த மூன்று தசாப்த போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டமை மகிழ்வைத் தந்தாலும், போரில் ஒரு இலட்சம் பேர் கொல்லப்பட்டமை பெரும் துயரைத் தருகிறது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அரசாங்கத்தின் போர் வெற்றி நிகழ்வு பத்தரமுல்லையில் அமைந்துள்ள நாடாளுமன்ற மைதானத்தில் இன்று மாலை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.
மூன்று தசாப்தகால போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட வெற்றி ஒருபுறத்தில் மகிழ்வைத் தந்தாலும் அந்தப் போரால் ஒரு இலட்சம் பேர் கொல்லப்பட்டமை பெரும் துயரைத் தருகிறது. போர் முடிவடைந்து நிலையான சமாதானம் மலர்ந்து 7 வருடங்கள் ஆகின்றன. துப்பாக்கி வேட்டுச் சத்தம் மௌனித்த போதிலும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவது பெரும் சவாலாகும். 20ஆம் நூற்றாண்டிலிருந்து இனமுரண்பாடு காணப்படுகின்றது. எனவே இவற்றை சரிசெய்வது நமது கடமையாகும்.இராணுவத்தை அரசாங்கம் வேட்டையாடுவதாக கூறுகிறவர்களின் அரசாங்கமே அவர்களை கடந்த காலங்களில் பெரும் துயரத்தை கொடுத்தனர் – என்றார்.