இலங்கை நிலச்சரிவுகள்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35ஆக உயர்வு
பிரசுரிக்கபட்ட திகதி: 19/05/2016 (வியாழக்கிழமை)
இலங்கையின் கேகாலை மாவட்டத்தில் தொடர்ச்சியாக ஏற்பட்ட நிலச்சரிவுகளில் புதையுண்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35ஆக உயர்ந்துள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தெகியோவிட்ட, புளத்கோபிட்டிய மற்றும் அரநாயக்க ஆகிய பிரதேசங்களில் இடம் பெற்ற இந்த நிலச்சரிவுகளின் பின்னர் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 131 ஆக அதிகரித்துள்ளன எனவும் அரசு கூறுகிறது.
தெகியோவிட்ட பகுதியில் புதையுண்ட 6 பேரில் 5 பேரும், புளத்கோபிட்டிய சம்பவத்தில் புதையுண்ட 16 பேரில் 14 பேரும் சடலங்களாக இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். மூன்று பேர் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கேகாலை மாவட்டத்தில் மழையுடன் கூடிய காலநிலை தொடர்வதால், மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள இராணுவதினர் நெருக்கடிகளை எதிர்கொள்வதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.இதன் காரணமாக இன்றைய தினம் மூன்று சடலங்களை மட்டுமே இராணுவத்தினரால் மீட்க முடிந்ததாக உள்ளூர் அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.