நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக 134 தொகுதிகளில் வெற்றியடைந்ததையொட்டி, தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளது. இதனால் தமிழகத்தின் முதல்வராக நாளை பதவியேற்கிறார் ஜெயலலிதா. அவருடன் அனைத்து துறை அமைச்சர்களும் பதவியேற்கிறார்கள். பதவியேற்பு விழா சென்னைப் பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது. இதனையொட்டி விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பல்கலைக்கழகத்தின் உள்ளேயும், வெளியேயும் சுத்தம் செய்யும் பணிகளில் நூற்றுக் கணக்கான பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜெயலலிதாவை வாழ்த்தி பெரிய பெரிய பேனர்களும் வைக்கப்படுகின்றன. பொதுமக்கள் விழாவை நேரில் காண கடற்கரை சாலையில் காணொலித் திரை வைக்கப்பட்டுள்ளது. சட்டமன்றத்தில் தேர்தலுக்காக அகற்றப்பட்ட ஜெயலலிதாவின் படங்கள் மீண்டும் அதே இடங்களில் வைக்கப்பட்டன.
கடற்கரை சாலைகளின் ஓரம் வர்ணம் பூசும் வேலைகளும் நடைபெறுகிறது. இரண்டே நாட்களில் அந்த பகுதியே பளபளப்பாகக் காணப்பட்டது. பாதுகாப்பிற்காக சென்னைப் பல்கலைக்கழகத்தை சுற்றிலும் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர்.