ஆப்கான் தலை நகர் காபூலில் இன்று காலை தலிபான்களால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டிருப்பதாக காபூல் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 329 பேர் காயங்களுக்கு உட்பட்டுள்ளனர். உயிராபத்தான நிலையில், சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் உயிரிழப்புக்கள் மேலும் அதிகரிக்ககூடுமென அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
ஆப்கானின் உள்ளூர் நேரப்படி காலை 9 மணிக்கு மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதலை அடுத்து மோதல்கள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக ஆப்கானின் இராணுவத் தரப்பு செய்தி வெளியிட்டுள்ளது.
தற்கொலைத் தாக்குதலை அடுத்து பாதுகாப்பு உயர்வட்டாரக் கட்டடங்களுக்குள் நுழைந்துள்ள தலிபான் போராளிகள் தொடர்ந்தும் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. எத்தனை தலிபான்கள் உள் நுழைந்து தாக்குகிறார்கள் என்ற எண்ணிக்கை விபரம் தமக்கு தெரியாது என்று பாதுகாப்பு வட்டாரங்கள் கூறுகின்றன.
குறித்த இத்தாக்குதல் தாம் ஏற்கனவே தெரிவித்த இளவேனிற்கால தாக்குதல்களின் ஒரு பகுதி என தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
மத்திய காபூலில் உள்ள பாதுகாப்பு முகவரமைப்பின் தலைமையகத்தை இலக்கு வைத்து தலிபான்களால் இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இலக்கு வைக்கப்பட்ட தலைமையகத்திற்கு அருகே ஆப்கானின் பாதுகாப்பு அமைச்சும் தூதரங்களும் அமைந்துள்ளன.
தற்கொலைத் தாக்குதலை அடுத்து ஆயுதப் போரில் ஈடுபட்டுள்ள தலிபான் போராளிகள் ஆப்கானின் பிரதான உளவு அமைப்பான தேசிய பாதுகாப்புச் செயலகத்திற்குள் நுழைந்திருப்பதாகப் பிந்திய செய்திகள் கூறுகின்றன.
காபுல் நகரின் மையப்பகுதியில் தற்கொலை தாக்குதல்
ஆப்கானிஸ்தான் தலைநகரான காபுல் நகரின் மையப்பகுதியில் இன்று (செவ்வாய்கிழமை) காலை தலிபான் தீவிரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் பலர் பலியாயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆனால், இத் தாக்குதலில் பலியனாவர்களின் எண்ணிக்கை மற்றும் சேத விபரங்கள் தொடர்பான தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.
இத்தாக்குதல் நடந்த இடத்தில் இருந்து சுமார் நூறடி தூரத்தில் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி மாளிகை, நேட்டோ ராணுவ தலைமையகம், அமெரிக்க தூதரகம் போன்றவை அமைந்துள்ளது. இருப்பினும், நேட்டோ ராணுவ தலைமையகம் மற்றும் அமெரிக்க தூதரகத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது.
காபுல் நகரமே அதிரும் வகையில் மேற்கொள்ளப்பட்ட குறித்த தாக்குதலில் ஏராளமானவர்கள் உயிரிழந்திருக்கக்கூடும் என ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானி அஞ்சம் வெளியிட்டுள்ள நிலையில் மீட்புப் பணிகள் தொடர்ந்து கொண்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.