அபோதாபாத்தில் தங்கியிருந்த பின்லேடன் கொல்லப்பட்ட தகவலை அமெரிக்கா தெரிவிக்காததற்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்தது. தனது நாட்டின் இறையான்மை தன்மைக்கு ஊறு விளைவிக்கப்பட்டதாக குற்றம் சாட்டியது. அதே போன்று தற்போது பலுசிஸ்தானுக்குள் ரகசியமாக நுழைந்த மன்சூர் கொல்லப்பட்டதற்கு அமெரிக்கா வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்ற கருத்து நிலவுகிறது.
தற்போது அதிபர் ஒபாமா வியட்நாமில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த அவர் இந்த விவகாரத்தில் பாகிஸ்தானிடம் அமெரிக்கா வருத்தம் தெரிவிக்காது. தலிபான் தலைவர் மன்சூர் கொல்லப்பட்டது ஒரு மைல் கல் ஆகும்.
பாகிஸ்தானில் மன்சூர் கொல்லப்பட்டதன் மூலம் தீவிரவாதிகளுக்கு அந்நாடு தொடர்ந்து ஆதரவு அளிப்பது தெரியவந்துள்ளது. பாகிஸ்தான் தீவிரவாதிகளின் சொர்க்க பூமியாக உள்ளது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே தீவிரவாதிகளுக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்பதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் என தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தான் தலிபான் தலைவர் முல்லா மன்சூர் கடந்த 21-ந் தேதி பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தானில் அமெரிக்காவின் ஆளில்லா விமானம் நடத்திய குண்டு வீச்சில் பலியானார். இவர் ஈரானில் இருந்து பாகிஸ்தான் எல்லைக்குள் ரகசியமாக ஊடுருவிய போது குண்டு வீச்சுக்கு பலியானார்.ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவ தலிபான் தீவிரவாதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த அந்நாட்டு அரசும் அமெரிக்காவும் விரும்புகின்றன. அதற்கு தலிபான்தலைவர் மன்சூர் மறுப்பு தெரிவித்துவந்தார். இதனால் அங்கு வன்முறை தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.
ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவுவதை பாகிஸ்தான் விரும்பவில்லை. எனவே தலிபான் தீவிரவாதிகளுக்கு அந்நாட்டு ராணுவம் மறைமுகமாக ஆதரவு அளித்து வருவதாகவும். பலூசிஸ்தானில் தலிபான் தலைவர்கள் தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது.
அதற்காக தான் பாகிஸ்தானில் கைபர்-பக்துன்கவா மாகாணத்தில் மட்டும் ஆளில்லா விமானங்கள் குண்டு வீச அமெரிக்காவுக்கு அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில் தான் பலுசிஸ்தானுக்குள் தலிபான் தலைவர் மன்சூர் ஊடுருவது அமெரிக்காவுக்கு உளவுத்துறை மூலம் தெரிய வந்தது. அதை தொடர்ந்து அங்கு திடீர் தாக்குதல் நடத்தி அவரை கொன்றது . அதன் பிறகே அமெரிக்க வெளியுறவு மந்திரி மன்சூர் மீதான தாக்குதல் குறித்து பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப்புக்கு தகவல் அளித்தார்.