சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தத்தினால் 21 ஆயிரத்து 600 கோடி ரூபா சொத்திழப்பு ஏற்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிடுகின்றார்.
எனினும், அனர்த்தங்கள் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு சர்வதேச பங்களிப்புடன் இழப்பீடுகள் பெற்றுக் கொடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.நிதியமைச்சின் அலுவலகத்தில் நேற்று (திங்கட்கிழமை) மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போது, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன், அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 93 ஆக உயர்ந்துள்ளதுடன், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும், மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் கூறினார்.
நிவாரணப் பணிகளை உரிய முறையில் மேற்கொள்ள அரசாங்கம் அனைத்து வகையான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதோடு, போதுமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரம் மற்றும் வசதிகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.