இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணாவிடின் சர்வதேசம் ஒதுக்கிவிடும்! - லக்ஷ்மன் கிரியெல்ல
பிரசுரிக்கபட்ட திகதி: 25/05/2016 (புதன்கிழமை)
இனப்பிரச்சினைக்கு இறுதித் தீர்வை வழங்காவிட்டால் சர்வதேசம் எம்மை ஒதுக்கித் தள்ளிவிடும். என்று அமைச்சர் லக் ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். வீதி அபிவிருத்தி அதிகார சபையின் 30 வருட பூர்த்தியை முன்னிட்டு ஜனாதிபதி தலைமையில் நேற்று பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற விழாவில் உரையாற்றுகையிலேயே உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக் ஷ்மன் கிரியெல்ல இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த பின்னர் அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்து இனப்பிரச்சினைக்கு தீர்வைக்கண்டிருக்க வேண்டும். ஆனால் சுதந்திரத்திற்கு பின்னர் எவரும் எந்த அரசாங்கத்தினரும் அனைத்து கட்சிகளுடனும் இணைந்து இனப்பிரச்சினைக்கு தீர்வைக்காணத் தவறிவிட்டனர்.இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வைக் காண்பதன் மூலமே நாட்டை அபிவிருத்திப் பாதையில் முன்னோக்கி நகர்த்த முடியும். இதற்கு தீர்வை காணாததன் காரணமாகவே 30 வருடகால யுத்தம் ஏற்பட்டது. சிங்கப்பூரில் பிரச்சினைகளுக்கு தீர்வை கண்டார்கள். எனவே தான் அந்நாடு இன்று எம்மைவிட அபிவிருத்தி கண்டுள்ளது.
இனப்பிரச்சினைக்கு தீர்வைக் கண்டால் மட்டுமே சர்வதேசம் எமக்கு ஆதரவை வழங்கும். அத்தோடு எமது நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ளும். இனப்பிரச்சினைக்கு தீர்வை காணாது இழுத்தடித்தால் சர்வதேசம் எம்மை கைவிட்டுவிடும். சுதந்திரத்திற்குப் பின்னர் இன்று நாட்டில் புதிய அரசியல் கலாசாரம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் நாட்டின் ஜனாதிபதியாகவுள்ளார்.
ஐ.தே.கட்சித் தலைவர் பிரதமராக பதவி வகிக்கிறார். எமது எதிராளிகள் இந்த இணக்கப்பாட்டு அரசாங்கத்திற்கு எதிராக என்ன விமர்சனம் செய்தாலும் இந்த இணக்கப்பாட்டு அரசை எதுவும் செய்ய முடியாது. எனவே இன்றைய இணக்கப்பாட்டு அரசில் இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வைக் காணமுடியும். இவ்வரசாங்கத்தில் நாம் இதற்கு தீர்வை பெற்றுக் கொள்ளாவிட்டால் எந்தவொரு அரசிலும் தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியாது.
வடக்கு, கிழக்கு, ஊவா மாகாணங்களில் அதிவேக நெடுஞ்சாலைகள் நிர்மாணிப்பதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. கொழும்பு – கண்டி அதிவேக நெடுஞ்சாலை வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று நாடு முழுவதும் 700 வீதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன என்றார்.