தெலங்கானா மாநிலத்தில் அனல் காற்றுக்கு 317 பேர் பலி!
பிரசுரிக்கபட்ட திகதி: 25/05/2016 (புதன்கிழமை)
தெலங்கானா மாநிலத்தில் அனல் காற்றால் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 317-ஆக உயர்ந்துள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மைத் துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. கோடைக் காலம் தொடங்கியது முதல், தெலங்கானாவில் வெப்பக் காற்று அதிகமாக வீசி வருகிறது. இதனால் இதுவரை 317 பேர் உயிரிழந்து விட்டனர்.
இதில் நல்கொண்டா மாவட்டத்தில் அதிகபட்சமாக 91 பேர் இறந்தனர். இதைத் தொடர்ந்து மகபூப்நகர் மாவட்டத்தில் 44 பேர் பலியாகி விட்டனர். இதனிடையே, அடுத்த 72 மணி நேரத்துக்குள், தெலங்கானா மாநிலத்தில் அடிலாபாத், நிஜாமாபாத், கரீம்நகர், மேடக், நல்கொண்டா, வாரங்கல் மற்றும் கம்மம் ஆகிய மாவட்டங்களில் ஆங்காங்கே அனல் காற்று அதிகமாக வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாநிலத்தின் அதிகபட்ச வெப்பநிலையாக ராமகுண்டத்தில் 45 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. வெப்பக் காற்றால் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என தெலங்கானா அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது.