மதுபானங்களை குறைவாக அருந்துங்கள்: - குடி மகன்களுக்கு உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் அறிவுரை
பிரசுரிக்கபட்ட திகதி: 26/05/2016 (வியாழக்கிழமை)
மதுபானங்களை குறைவாக அருந்துங்கள் என்று"குடி'மகன்களுக்கு உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் அறிவுரை வழங்கியுள்ளார்.பிகாரில் பூரண மதுவிலக்கு கடந்த மாதம் அமல்படுத்தப்பட்டது. எனினும், அண்டை மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் மது விற்பனை தாராளமாக இருப்பதால் அதன் எல்லையையொட்டி அமைந்துள்ள பிகார் பகுதிவாசிகள் அங்கு சென்று மது அருந்தும் வழக்கம் அதிகரித்து வருகிறது.
மேலும், உத்தரப் பிரதேசத்திலிருந்து பிகாருக்குள் அதிக அளவிலான மது வகைகள் சட்ட விரோதமாகக் கொண்டு வருவதும் அதிகரித்துள்ளது.இந்த விவகாரம் தொடர்பான அண்மையில் கருத்துத் தெரிவித்த பிகார் முதல்வர் நிதீஷ் குமார், உத்தரப் பிரதேசத்திலும் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இச்செய்தியானது, ஊடகங்களில் வெளியானதால் உத்தரப் பிரதேச அரசுக்கு தர்ம சங்கடமான சூழ்நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், இதுதொடர்பாக உத்தரப் பிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவிடம் செய்தியாளர்கள் புதன்கிழமை கேள்வியெழுப்பினர். அதற்குப் பதிலளித்து அவர் பேசியதாவது: உத்தரப் பிரதேசத்தில் மதுபான விற்பனை நிலையங்களை நம்பி லட்சக்கணக்கான ஊழியர்கள் இருக்கின்றனர். இதன் மூலம் ஆயிரக்கணக்கான கரும்பு விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். எனவே, அவசரகதியில் மதுவிலக்கு என்று அறிவிக்க முடியாது. வேண்டுமானால், மது அருந்துபவர்களை குறைவாக அருந்துமாறு அறிவுறுத்தலாம் என்றார் அகிலேஷ் யாதவ்.