கார்களுக்கு மேலே பாய்ந்து 1200 பேரை சுமந்து செல்லும் பஸ் - சீனாவில் இந்த ஆண்டு அறிமுகம்
பிரசுரிக்கபட்ட திகதி: 27/05/2016 (வெள்ளிக்கிழமை)
சீனாவில் அதிகரித்துவரும் காற்றுமாசு மற்றும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாணும் வகையில் நவீனரக டிராம் வடிவ பஸ்களை அறிமுகப்படுத்துவதற்கான முதற்கட்ட முயற்சிகள் தொடங்கியுள்ளது.
60.60 மீட்டர் நீளம், 7.80 மீட்டர் அகலம், 4.50 மீட்டர் உயரம் கொண்ட இந்த மெகா பஸ்கள், பேட்டரிகளால் இயங்கும் வகையில் தயாரிக்கப்படவுள்ளது. சராசரி சாலைகளின் ஓரமாக டிராம் தண்டவாளம் போன்ற இருப்புப் பாதையில் இந்த பஸ் செல்லும்போது, சாலைகளில் ஓடும் கார்போன்ற சிறிய வாகனங்களை மோதாமல் ஏறி கடந்து செல்லும் வகையில் இந்த பஸ்களின் உடலமைப்பு இருக்கும்.
சுரங்கப்பாதை போன்ற வடிவிலான இந்த பஸ்சின் தயாரிப்பு செலவு ஒரு சுரங்கப்பாதையை கட்டுவதற்கான செலவில் ஐந்தில் ஒரு பங்காக மட்டுமே இருக்கும்.
ஒவ்வொரு நிறுத்தத்திலும் இந்த பஸ்கள் நிற்கும்போது விமானத்தில் இருப்பதைப் போன்ற படிக்கட்டுகள் பக்கவாட்டில் இறங்கும். அதன் வழியாக பயணிகள் ஏறி, இறங்கலாம்.
கடந்தவாரம் சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்ற சர்வதேச வாகன கண்காட்சியில் செயல்முறை விளக்கமாக காட்சிப்படுத்தப்பட்ட இந்த பஸ், வடக்கு சீனாவில் உள்ள ஹேபேய் மாகாணத்தில் இந்த ஆண்டு இறுதியில் பரீட்சார்த்த முறையில் அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.