போரால் பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து ஐரோப்பாவில் புகலிடம் தேடி அகதிகள் வந்து கொண்டிருந்த படகு மத்தியதரைக் கடலில் மூழ்கியதில் 45 பேர் உயிரிழந்ததாக இத்தாலிய கடற்படை தெரிவித்தது. இதுகுறித்து சுட்டுரை (டுவிட்டர்) வலைதளத்தில் அந்தக் கடற்படை தெரிவித்ததாவது:
மத்தியதரைக் கடல் பகுதியில் வெள்ளிக்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளான படகிலிருந்து 135 அகதிகளை கடற்படைக் கப்பல் மீட்டது.கடலில் மூழ்கி உயிரிழந்த 45 பேரது உடல்கள் மீட்கப்பட்டன. அந்தப் பகுதியில் தொடர்ந்து தேடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதுதவிர, கடலில் சிக்கித் தவித்த 16 படகுகளில் இருந்து 1,900 பேரை வெள்ளிக்கிழமை மீட்டோம். கடந்த நான்கு நான்களில் மட்டும் லிபியக் கடலோரப் பகுதியிலிருந்து 10,000 அகதிகள் மீட்டகப்பட்டனர் என்று இத்தாலிய கடற்படை தெரிவித்தது.விபத்துக்குள்ளான படகில் 350 அகதிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது.கடந்த 3 நாள்களில் நிகழும் 3-ஆவது படகு விபத்து இது என்பது குறிப்பிடத்தக்கது.
லிபியாவிலிருந்து சுமார் 650 பேருடன் ஐரோப்பாவை நோக்கிப் புறப்பட்ட அகதிகள் படகு புதன்கிழமை கவிழ்ந்ததில் 100 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.சம்பவ இடத்துக்கு அருகே நின்று கொண்டிருந்த இத்தாலி கடற்படைக் கப்பலில் இருந்த வீரர்கள் 560 அகதிகளை மீட்டனர். அகதிகளை ஏற்றி வந்த மற்றொரு படகு வியாழக்கிழமை கவிழ்ந்ததில் 30 பேர் வரை உயிரிழந்ததாக ஐரோப்பிய யூனியன் கடற்படை தெரிவித்தது.