கடந்த பல ஆண்டுகளாக நாட்டில் பரவியுள்ள ஊழலை வேரறுப்போம் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்தார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டாண்டுகள்நிறைவடைந்ததையொட்டி, தில்லி"இந்தியா கேட்' பகுதியில், "புதிய விடியல்' எனும் தலைப்பில் பாஜக அரசின் சாதனை விளக்க நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லி, ராம்விலாஸ் பாஸ்வான், வீரேந்திர சிங், உமா பாரதி, மேனகா காந்தி, கிரண் ரிஜிஜு உள்ளிட்டோர் பங்கேற்று துறைவாரியாக மத்திய அரசு செயல்படுத்தி வரும் நலத் திட்டங்கள் குறித்து விரிவாகப் பேசினர்.இதுதவிர, அமிதாப் பச்சன் உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்களும் இதில் பங்கேற்றனர். விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது.
முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் எல்லா துறைகளிலும் ஊழல் மலிந்திருந்தது. இதனால் நாட்டின் வளர்ச்சி மட்டுப்பட்டு, திட்டப்பணிகள் அனைத்தும் தடைப்பட்டு நின்றன. ஆனால், நிலக்கரிச் சுரங்க முறைகேடு, அலைக்கற்றை முறைகேடு ஆகியவை எந்தவிதத் தடையுமின்றி நடைபெற்றன. இதுபோன்ற ஊழல் முறைகேடுகளை ஒழிக்கும் ஒரே நோக்கத்துடனேயே பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்தது. அதனை நாட்டு மக்கள் இப்போது கண்கூடாக காண்கின்றனர். எனது தலைமையிலான ஆட்சியானது, ஊழலை வேரறுப்பதையே முக்கியப் பணியாக கொண்டு செயல்படுகிறது. விரைவில் ஊழலை பூண்டோடு ஒழிப்போம் என உறுதியாக நம்புகிறேன்.கடந்த ஆட்சிக்காலங்களில் சுரண்டப்பட்டு வந்த மக்களின் வாழ்க்கை தற்போது எளிதாகியுள்ளது. ஏழைகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
இதனால் மக்கள் முன்பு முழு திருப்தியுடன் என்னால் நிற்க முடிகிறது. பாஜக அரசு மீதான மக்களின் நம்பிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இவ்வாறு, இரண்டே ஆண்டுகளில் மக்களுக்காக இத்தனை வளர்ச்சித் திட்டங்களை பாஜக அரசு செயல்படுத்தியதை காங்கிரஸôல் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. எனவே, அரசின் திட்டங்களைத் தடுப்பதையே அவர்கள் கொள்கையாக கொண்டுள்ளனர். ஆனால், மக்களின் துணையுடன் எதிர்க்கட்சிகளின் முட்டுக்கட்டைகளைத் தகர்த்து எனது அரசு பணியாற்றும் என்றார் மோடி.