போர்க்கால மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அமைக்கப்படவுள்ள விசாரணை பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகள் இடம்பெறமாட்டார்கள். உள்ளுர் நீதிபதிகளே இருப்பார்கள் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த வியாழக்கிழமை அலரிமாளிகையில் இடம்பெற்ற படையதிகாரிகளுடனான சந்திப்பின் போது உறுதிப்படுத்தியுள்ளார்.
எதிர்வரும் ஜூன் 13ஆம் திகதி ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் அமர்வு ஆரம்பிக்கும் போது இலங்கையின் நிலைப்பாடு தொடர்பில் ஆணையாளர் செய்ட் அல் ஹூசைன் தமது நிலைப்பாட்டை வெளியிடுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுவதாக ரணில் விக்கிரமசிங்க இந்த சந்திப்பின் போது குறிப்பிட்டுள்ளார். அதேநாளன்று இலங்கையின் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரவும் இலங்கையின் நிலைப்பாடு தொடர்பில் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளதாகவும் ரணில் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் 29ஆம் திகதி இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணைப்பொறிமுறை ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் அதில் வெளிநாட்டு நீதிபதிகள் உள்ளடங்க வேண்டும் என்ற யோசனையை இலங்கையும் அமெரிக்காவும் இணைந்தே முன்வைத்தன. எனினும் தற்போது இதில் வெளிநாட்டு நீதிபதிகள் என்ற அம்சம் பிரச்சினைக்குள்ளாக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஜனாதிபதியுடன் ஜப்பான் சென்றுள்ள அமைச்சர் மங்கள சமரவீர நாடு திரும்பியதும் படையதிகாரிகளுடன் மற்றுமொரு சந்திப்பு நடத்தப்படும் என்று குறிப்பிட்ட ரணில் விக்கிரமசிங்க, வடக்கில் படையினர் வசம் உள்ள பொதுமக்களின் காணிகள் தொடர்ந்தும் விடுவிக்கப்படும் என்றும் காணாமல்போனோர் தொடர்பில் அதிக அதிகாரங்களை கொண்ட அலுவலகம் ஒன்று அமைக்கப்படும் என்றும் இதன்போது தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பில் பங்கேற்ற இராணுவ தளபதி கிரிசாந்த டி சில்வா, போர்க்குற்ற பொறிமுறையின் போது படையினர் கூட்டாகவா? அல்லது தனித்தனியாகவா? விசாரணைகளுக்கு உள்ளாக்கப்படுவர் என்ற கேள்வியை எழுப்பினார். இதற்கு நேரடி பதிலை வழங்காத ரணில் விக்கிரமசிங்க, தென்னாபிரிக்காவை போன்ற உண்மையை கண்டறியும் குழு ஒன்று அமைக்கப்படும் என்றும் இது தொடர்பில் அமைச்சர் மங்கள சமரவீர மேலதிக விளக்கங்களை வழங்குவார் என்றும் தெரிவித்தார்.