ஐ.பி.எல். இறுதிப் போட்டியில் ஐதராபாத் அணி பெங்களூர் அணியை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.9–வது ஐ.பி.எல். போட்டியின் இறுதி ஆட்டம் பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கி நடைப்பெற்றது.
இன்றைய போட்டியில் வீராட்கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் இதுவரை ஐ.பி.எல். கோப்பையை வென்றது இல்லை. இதனால் முதல் முறையாக கோப்பையை வெல்லும் ஆர்வத்துடன் களமிறங்கின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் கேப்டன் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். பெங்களூர் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஐதராபாத் அணியில், காயம் காரணமாக கடந்த போட்டியில் விளையாடதா முஸ்தாபிஜூர் ரஹ்மான் அணிக்கு திரும்பியுள்ளார். போல்ட் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
டேவிட் வார்னரும், ஷிகார் தவானும் தொடக்க வீரர்களாக களமிறங்கினார்கள். இருவரும் அந்த அணிக்கு நல்ல தொடக்கத்தை அளித்தார்கள். தவான் நிதானமாக ஆட வார்னர் தனது வழக்கமான அதிரடியை வெளிப்படுத்தினார். தவான் 28 ரன்கள் எடுத்திருந்த போது சஹால் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இதனை அடுத்து களமிறங்கிய ஹென்றிக்ஸ் 4 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இதனை அடுத்து கேப்டன் வார்னருடன் யுவராஜ் சிங் இணைந்தார். இந்த ஜோடி பெங்களூர் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்து ரன் குவித்தது. 38 பந்துகளில் 69 ரன்கள் எடுத்திருந்த வார்னர் அரவிந் பந்துவீச்சில் கேட்ச் ஆனார்.
அதிரடியாக ஆடிய யுவராஜ் 23 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து அரவிந்த் பந்து வீச்சில் அவுட் ஆனார். இதனால் பெங்களூர் அணியின் ரன் வேகம் குறைந்தது. ஆனால் ஆல்ரவுண்டர் பென் கட்டிங் கடைசி மூன்று ஓவர்களில் அதிரடியாக விளையாடி அந்த அணி 208 ரன்கள் குவிக்க உதவினார். 15 பந்துகாளில் 39 ரன்கள் குவித்த பென் கட்டிங், மொத்தம் நான்கு சிக்ஸ் அடித்தார். அதில் ஒரு சிக்ஸ் மைதானத்தை விட்டு 117 மீட்டர் தூரம் பறந்தது.
பெங்களூர் அணியின் கிறிஸ் ஜோர்டான், 4 ஓவர்கள் வீசி 45 ரன்களை வாரி வழங்கினாலும் 3 விக்கெட்களை வீழ்த்தினார். சிறப்பாக பந்து வீசிய அரவிந்த் 2 விக்கெட்களை வீழ்த்தினார்.
209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலாய இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணியில் கெய்லும், கோலியும் தொடக்க வீரர்களாக களமிறங்கினார்கள்.
இந்த ஐ.பி.எல். தொடரில் சரியாக விளையாடாத கெய்ல், முக்கியமான இந்த போட்டியில் தனது வேலையை காட்டினார். இதனால் பெங்களூர் அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. வழக்கம் போல் கெய்ல் ரன் குவிப்பில் பவுண்டரிகளை விட சிக்சர்கள் அதிகமாக இருந்தது. கோலி நிதானமாக ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
கெய்ல் ரன் குவித்த வேகத்தை பார்த்த போது பெங்களூர் அணி 18 ஓவர்களிலேயே வெற்றிப் பெற்றுவிடும் என்று தோன்றியது. ஆனால் 38 பந்துகளில் 78 ரன்கள் எடுத்திருந்த போது கெய்ல் பென் கட்டிங் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கெய்ல் மொத்தமாக 8 சிக்சர்கல் அடித்தார்.
கெய்ல் ஆட்டமிழந்ததும் கோலி வேகம் காட்டினார். ஆனால் எதிர்பாராதவிதமாக 35 பந்துகளில் 54 ரன்கள் எடுத்திருந்த போது ஷரண் பந்து வீச்சில் போல்ட் ஆனார். இதன் பிறகு களமிறங்கிய நட்சத்திர வீரர்களான டி வீல்லியர்சும்(5), வாட்சனும்(11) சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க பெங்களூர் அணி தோல்வியை நோக்கி செல்ல ஆரம்பித்து. ராகுல் 11 ரன்களும், பின்னி 18 ரன்களும் எடுத்தனர்.
கடைசி ஓவரில் பெங்களூர் அணிக்கு 18 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் அந்த அணியால் 9 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் அந்த அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து. ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி முதல் முறையாக ஐ.பி.எல். கோப்பையை வென்று சாதனைப்படைத்து.
ஐதராபாத் அணி தரப்பில் பென் கட்டிங் 2 விக்கெட்களும், ரகுமான், ஷரண் மற்றும் பிபுல் சர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள். புவனேஷ்வர் குமார் 4 ஓவர்கள் வீசி 25 ரன்கள் மட்டும் கொடுத்தார். ஆட்டநாயகனாக பென் கட்டிங் தேர்வு செய்யப்பட்டார்.