அலரிமாளிகையில் சிகரெட் கம்பனிகாரர்கள் முன்னிலையில் என்னை நிற்கவைத்து கடந்த ஆட்சியில் கேள்வி கேட்கப்பட்டது. ஆனால் சிகரட்டுக்கு எதிரான எனது போராட்டத்தை கைவிடவில்லை. இன்று அதில் வெற்றியும் கண்டுள்ளேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
உலக புகையிலை ஒழிப்பு தினம் இன்று கொழும்பில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இதனை நினைவுபடுத்தினார். இங்கு ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்,
நான் சுகாதார அமைச்சராக கடந்த ஆட்சியில் 5 வருடங்கள் பணியாற்றினேன். இதன்போது எனக்கு அதிகளவில் கசப்பான அனுபவங்களே ஏற்பட்டன. சிகரட் பாவனையை குறைப்பதற்கும், சிகரட்டை ஒழிப்பதற்கும், சிகரட் பெட்டியில் அதன் பாதகங்கள் தொடர்பில் நூற்றுக்கு 80 வீதம் புகைப்படத்தை அச்சிடுவதற்கும் போராடினேன்.
இதன்போது என்னை அலரிமாளிகைக்கு அழைத்து சிகரட் கம்பனிக்காரர்கள் முன்னிலையில் நிற்கவைத்து கேள்வி கேட்டனர். நீதிமன்றம் சென்றேன். அங்கு நீதிமன்ற வாங்குகளில் பலமணிநேரம் அமர்ந்திருந்தேன். இறுதியில் என்னை இந் நாட்டின் ஜனாதிபதியாக மக்கள் தெரிவு செய்தனர்.