சச்சின் மகன் அர்ஜுன் மீதான
சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி!
பிரசுரிக்கபட்ட திகதி: 01/06/2016 (புதன்கிழமை)
16 வயதுக்குட்பட்டோருக்கான மண்டல கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், மேற்கு மண்டல கிரிக்கெட் அணியில் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் இடம்பெற்றுள்ளார். ஆனால், பண்டாரி கோப்பைக்கான ஒரு போட்டியில் 1009 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்த பிரணவ் தனவாடே தேர்வு செய்யப் படவில்லை.
இது குறித்து சமூக வலைத்தளங்களில் சிலர் கருத்து தெரிவித்ததால் சர்ச்சை ஏற்பட்டது. சிலர் அர்ஜூன் தேர்வு செய்யப்பட்டதற்கு ஆதரவாகவும் பதிவிட்டிருந்தனர்.
தற்போது இந்த சர்ச்சைக்கு பிரணவ்வின் தந்தை பிரசாந்த் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இது குறித்து அவர், ’’மேற்கு மண்டல 16 வயதுக்குட்பட்டோர் அணிக்கு என் மகன் பிரணவ் தேர்வு செய்யப்படாததற்கு தவறான கட்டுக்கதைகளை வெளியிடுகின்றனர். மேற்கு மண்டல அணி வீரர்கள், மும்பை கிரிக்கெட் சங்கத்தின் 16 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் இருந்து தேர்வு செய்யப்படுகின்றனர். அதில் அர்ஜூன் இடம்பெற்றிருந்ததால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிரணவ் அந்த அணியில் இல்லை. அப்படியிருக்கும்போது ஏன் இந்த சர்ச்சை? பிரணவ் தேர்வு பெறாததற்கு தவறான கட்டுக்கதைகளை வெளியிடுகின்றனர்.
அர்ஜுனும் பிரணவ்வும் நல்ல நண்பர்கள். இருவரும் (U-19) போட்டிகளில் விளையாடி தங்கள் திறமையால் முன்னேறி வருகின்றனர். அர்ஜுன் ஒரு ஆல்-ரவுண்டர். பிரணவ் ஒரு விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன்’’என்று கூறியுள்ளார்.