காட்டில் தனித்து விடப்பட்ட சிறுவனை தேடும் பணியில் ராணுவம் இணைந்தது: 5 நாட்களாகியும் தகவல் இல்லை
பிரசுரிக்கபட்ட திகதி: 01/06/2016 (புதன்கிழமை)
ஜப்பானின் வடக்கு பிராந்தியமான ஒகாய்டோ தீவில் வசிக்கும் தம்பதி, கடந்த சனிக்கிழமை தங்கள் 7 வயது மகனை வெளியே அழைத்துச் சென்று காட்டுப்பாதை வழியாக வந்துகொண்டிருந்தனர். அப்போது அந்த சிறுவன் தொடர்ந்து குறும்பு செய்துள்ளான். அத்துடன், வாகனங்கள் மீதும், பொதுமக்கள் மீதும் சிறுசிறு கற்களை எறிந்து விளையாடியுள்ளான்.
இதனால் கோபமடைந்த பெற்றோர், அவனுக்கு தண்டனை கொடுக்கும் விதமாக அவனை கரடிகள் நிரம்பிய நடுக்காட்டில் தனியே விட்டுவிட்டு சென்றுள்ளனர். அது கரடிகள் நிரம்பிய காடு ஆகும். 5 நிமிடம் கழித்து அங்கு சென்று பார்த்தபோது சிறுவனைக் காணவில்லை. பின்னர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.
இதையடுத்து ஹெலிகாப்டர்களில் நூற்றுக்கணக்கான மீட்புப்படையினருடன் போலீசார் காட்டிற்கு சென்று சிறுவனைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். 5 நாட்களாக தொடர்ந்து தேடியும் அவனை இதுவரை கண்டுபிடிக்கவில்லை. இதனால், மீட்புப் படையுடன் 75 ராணுவ வீரர்களும் தேடும் பணியில் களமிறங்கியுள்ளனர்.
அப்பகுதியில் கன மழை பெய்து வருவதால் தேடும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. சிறிய ஓடைகளை ஒட்டியுள்ள ஆழமான குகைகள் போன்ற எளிதில் நெருங்க முடியாத இடங்களில் சிறுவனை தேடுவதற்காக ஜப்பானின் தற்காப்பு படையினரை உதவிக்கு வரும்படி நானி நகர நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.