மது மற்றும் போதைப் பொருள் பழக்கத்துக்கு எதிரான பிரச்சாரத்தில் சச்சின் பெயரை பயன்படுத்தி கொள்ள அனுமதி
பிரசுரிக்கபட்ட திகதி: 01/06/2016 (புதன்கிழமை)
கேரளாவில் மது மற்றும் போதைப் பொருள் பழக்கத்துக்கு எதிரான பிரச்சாரத்தில், சச்சின் டெண்டுல்கர் தனது பெயரை பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கியுள்ளதாக அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் பங்கேற்கும் கேரளா பிளாஸ்டர்ஸ் கால்பந்து கிளப் (கேபிஎப்சி) உரிமையாளராக உள்ள சச்சின் டெண்டுல்கருடன், நடிகர்கள் சிரஞ்சீவி, நாகார்ஜுனா, தொழிலதிபர் நிம்மகட்டா பிரசாத் ஆகியோர் அந்த அணியின் புதிய முதலீட்டாளர்களாக இணைந்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் கேரள தலைமைச் செயலகத்தில் முதல்-மந்திரி பினராயி விஜயனை இன்று சந்தித்துப் பேசினர்.
இது குறித்து பினராயி விஜயன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கேரளாவில் மது மற்றும் போதைப்பொருள் உபயோகத்திற்கு எதிரான பிரச்சாரத்தில் அரசு ஈடுபட்டுள்ளது. இந்தப் பிரச்சாரத்திற்கு வலுசேர்க்கும் விதமாக கேரள அரசுக்கு தனது பெயரை பயன்படுத்திக் கொள்ள சச்சின் அனுமதி வழங்கியுள்ளார். இந்தப் பிரச்சாரத்திற்கு தான் ஒத்துழைக்க தயாராக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், இதுதொடர்பான பிராண்ட் அம்பாசடராக சச்சின் டெண்டுல்கரை நியமிப்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.