பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: ராட்வன்ஸ்கா, ஹாலெப் அதிர்ச்சி தோல்வி
பிரசுரிக்கபட்ட திகதி: 01/06/2016 (புதன்கிழமை)
பிரெஞ்ச் ஓபன் டென்னிசில் முன்னணி நட்சத்திர வீராங்கனைகள் ராட்வன்ஸ்கா, சிமோனா ஹாலெப் அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவினர்.
மழையோடு விளையாடு
‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இந்த சீசனில் மழை போட்டிக்கு அவ்வப்போது இடையூறு ஏற்படுத்துகிறது. பலத்த மழை காரணமாக 9–வது நாளான நேற்று முன்தினம் ஒரு ஆட்டம் கூட நடத்தப்படவில்லை. பிரெஞ்ச் ஓபனில் மழையால் ஒரு நாள் ஆட்டங்கள் முழுமையாக ரத்தாவது கடந்த 16 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும்.
இந்த நிலையில் நேற்றும் மழை குறுக்கிட்டது. இதனால் சுமார் 4 மணி நேரம் ஆட்டம் பாதிக்கப்பட்டது. அதன் பின்னர் நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவில் இரு அதிர்ச்சி தோல்விகள் நிகழ்ந்தன.
ராட்வன்ஸ்கா தோல்வி
2–ம் நிலை வீராங்கனை அக்னீஸ்கா ராட்வன்கா (போலந்து), பைரோன்கோவாவுக்கு (பல்கேரியா) எதிரான 4–வது சுற்றில் 6–2, 3–0 என்ற கணக்கில் முன்னிலை வகித்த போது மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை மாலை தடைப்பட்ட இந்த ஆட்டம் நேற்று தொடர்ந்து நடந்தது. சிறிது நேரத்தில் ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து விடுவார் என்று எதிர்பார்த்த ராட்வன்ஸ்காவுக்கு, பைரோன்கோவா நம்ப முடியாத அளவுக்கு ‘செக்’ வைத்தார். தொடர்ந்து 10 கேம்களை வசப்படுத்தி ஆட்டத்தின் போக்கை தலைகீழாக மாற்றிய பைரோன்கோவா வெற்றிக்கனியையும் பறித்தார்.
முடிவில் தரவரிசையில் 102–வது இடத்தில் உள்ள பைரோன்கோவா 2–6, 6–3, 6–3 என்ற செட் கணக்கில் ராட்வன்ஸ்காவை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார். 2006–ம் ஆண்டு முதல் பிரெஞ்ச் ஓபனில் விளையாடி வரும் பைரோன்கோவா இங்கு கால்இறுதியை எட்டுவது இதுவே முதல் முறையாகும். அத்துடன் 10 ஆண்டுகளுக்கு பிறகு பிரெஞ்ச் ஓபனில் கால்இறுதிக்கு வந்த முதல் பல்கேரிய நாட்டவர் என்ற சிறப்பையும் அவர் பெற்றார்.
ஹாலெப்பும் வெளியேற்றம்
6–ம் நிலை வீராங்கனையான சிமோனா ஹாலெப் (ருமேனியா), தரவரிசையில் 24–வது இடம் வகிக்கும் சமந்தா ஸ்டோசுருக்கு (ஆஸ்திரேலியா) எதிரான 4–வது சுற்றில் 5–3 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த போது மழையால் நின்று போனது. ஒரு நாள் இடைவெளிக்கு பிறகு தொடர்ந்து நடந்த இந்த மோதலில் ஸ்டோசுர் அதிரடியாக விளையாடி சரிவில் இருந்து மீண்டார். ஸ்டோசுர் 7–6 (7–0), 6–3 என்ற நேர் செட் கணக்கில் சிமோனாவை வெளியேற்றி கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.