ஜப்பானில் பெற்றோர்களால் தண்டிக்கப்பட்டு, காணாமல் போன சிறுவன் கண்டுபிடிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 03/06/2016 (வெள்ளிக்கிழமை)
ஜப்பானில் பெற்றோர்களால் தண்டனையாக காட்டுக்குள் விடப்பட்டு, காணாமல் போன சிறுவன் 6 நாட்களுக்கு பின்னர் கண்டுபிடிக்கப்பட்டான்.
ஜப்பானில் யமட்டோ டனூகா என்ற 7 வயது சிறுவன் பெற்றோர் பேச்சை கேட்காமல் சேட்டைகள் அதிகமாக செய்து உள்ளான்.
யமடோ டனூகா கார்கள் மீதும், ஆட்கள்மீதும் கல்வீசி தாக்குதல் நடத்தி ஒழுங்கீனமாக நடந்து கொண்டதால், அதற்கு தண்டனை வழங்கும் விதமாக பெற்றோர் கடந்த சனிக்கிழமையன்று அடர்ந்த காட்டுப்பகுதியில் உள்ள ஒரு சாலையில் அவனை விட்டு விட்டு வந்து விட்டனர். சிறிது நேரம் கழித்து அவர்கள் திரும்ப அங்குசென்று பார்த்த போது சிறுவன் அங்கு இல்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் போலீசிடம் சென்றனர். பின்னர் போலீசார் சிறுவனை கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இதற்கிடையே அங்கு மழையும் பெய்ததால் அவனை தேடிக்கண்டுபிடிப்பது கடினமான பணியாக மாறிவிட்டது என்று கூறப்பட்டது.
தற்போது காணாமல் போன ஜப்பான் சிறுவன் யமட்டோ டனூகா 6 நாட்களுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டான். பெற்றோரால் தனியாக விடப்பட்ட பின்னர் வனப்பகுதிக்குள் தொடர்ந்து நடந்து சென்றதாகவும், வனப்பகுதிக்குள் ஒரு குடில் இருந்ததைப் பார்த்து அங்கு சென்றுவிட்டதாகவும் சிறுவன் கூறிஉள்ளான். சிறுவனுக்கு சிராய்ப்புக் காயங்கள் உள்ளது. சிறுவன் சோர்வாக காணப்பட்டாலும் நல்ல உடல் நலத்துடன் உள்ளதாகவும் சிறுவன் மருத்துவ ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு உள்ளான் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சிறுவனை தனியாக விட்டதற்காக அவனிடம் மன்னிப்பு கோரியதாக அவனது தந்தை மருத்துவமனைக்கு வெளியே செய்தியாளர்களிடம் கூறிஉள்ளார். எனது மகன் உயிரோடு இருப்பது தனக்கு அளவில்லா ஆனந்தத்தை அளிப்பதாகவும், இனி மகனை அன்போடு வளர்க்கப் போவதாகவும் குறிப்பிட்டு உள்ளார். எனது மகனின் பள்ளியில் உள்ள அனைவரிடமும், மீட்பு படையில் ஈடுபட்ட அனைவரிடமும், இச்சம்பவத்தினால் பெரும் துயரம் அடைந்த அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கின்றேன் என்று சிறுவனின் தந்தை டகாயுகி தனோகா கூறிஉள்ளார்.
இருப்பினும் சிறுவன் விவகாரத்தில் அலட்சியமான செயல்பாட்டுக்காக, பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.