கிரீஸில் 700 அகதிகளுடன் சென்ற படகு மாயமானதில் 104 பேரின் சடலம் லிபிய கடற்கரையில் ஒதுங்கியது
பிரசுரிக்கபட்ட திகதி: 03/06/2016 (வெள்ளிக்கிழமை)
கிரிஸ் அருகே 700 பேருடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் 104 பேரின் சடலம் லிபிய கடற்கரையில் ஒதுங்கி உள்ளதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டுப் போரால் நிலைகுலைந்துள்ள ஈராக், சிரியா, லிபியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். பல்வேறு நாடுகளுக்கு கடல் கடந்து செல்லும் அகதிகள் ரப்பர் படகுகள் போன்றவற்றில் பாதுகாப்பற்ற முறையில் பயணம் செய்கின்றனர்.
மத்திய தரைக்கடல் வழியாக இவ்வாறு அகதிகளை அளவுக்கு அதிகமாக ஏற்றிச் செல்லும் படகுகள், நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி பலத்த உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தி வருவது தொடர்கதை ஆகி வருகிறது. சமீப காலமாக ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ள மக்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 10 லட்சத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில், கிரீஸ் நாட்டுக்குள் குடியேறும் நோக்கத்தில் சுமார் 700 பேருடன் வந்த அகதிகள் படகு எகிப்து நாட்டை ஒட்டியுள்ள கிரெட்டே என்ற கடற்பகுதி வழியாக வந்தபோது கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதுதொடர்பான தகவல் அறிந்ததும், இரண்டு கடலோர ரோந்து கப்பல்கள், ஒரு ராணுவ விமானம் மற்றும் மூன்று ஹெலிகாப்டர்களை கிரீஸ் அரசு தேடுதல் பணியில் ஈடுபடுத்தியது. விரைந்துவந்த கடற்படையினர் இதுவரை 302 பேரை உயிருடன் மீட்டுள்ளனர்.
இந்நிலையில் 104 பேரின் சடலம் லிபிய கடற்கரையில் ஒதுங்கி உள்ளதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. அளவுக்கதிகமான ஆட்கள் ஏற்றப்பட்டிருந்ததால், சுமை தாங்காமல் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.