பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் செரீனா– முகுருஜா பெண்கள் பிரிவில் செரீனா-முகுருஜா மகுடத்துக்கு மோதுகிறார்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 04/06/2016 (சனிக்கிழமை)
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச், முர்ரேவும், பெண்கள் பிரிவில் செரீனா, முகுருஜாவும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.
முகுருஜா கலக்கல்
‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. ‘கிளைமாக்ஸ்’ கட்டத்துக்கு வந்து விட்ட இந்த டென்னிஸ் திருவிழாவில் நேற்று பெண்கள் ஒற்றையர் அரைஇறுதி ஆட்டங்கள் நடந்தன.
ஒரு ஆட்டத்தில் 4-ம் நிலை வீராங்கனையான கார்பின் முகுருஜா (ஸ்பெயின்), ஆஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசுருடன் மோதினார். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய முகுருஜா முதலாவது செட்டை 33 நிமிடங்களில் முடிவு கொண்டு வந்தார். 2-வது செட்டிலும் ஸ்டோசுரை கலங்கடித்த முகுருஜா 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். 2000-ம் ஆண்டு கொஞ்சிதா மார்ட்டினசுக்கு பிறகு பிரெஞ்ச் ஓபனில் இறுதி சுற்றை தொட்ட முதல் ஸ்பெயின் வீராங்கனை என்ற சிறப்பு முகுருஜாவுக்கு கிடைத்துள்ளது.
செரீனா போராடி வெற்றி
மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியனும், ‘நம்பர் ஒன்’ சூறாவளியுமான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், நெதர்லாந்தின் கிகி பெர்டென்சை சந்தித்தார். இதில் முதல் செட்டில் செரீனா வெகுவாக தடுமாறினார். ஒரு கட்டத்தில் 3-5 என்ற கணக்கில் பின்தங்கிய செரீனா, அதிர்ஷ்டவசமாக எதிராளியின் ‘செட் பாயிண்ட்’ ஆபத்தில் இருந்து தன்னை காப்பாற்றி கொண்டு இந்த செட்டை டைபிரேக்கருக்கு இழுத்துச் சென்றார். அதைத் தொடர்ந்து டைபிரேக்கரில் போராடி முதலாவது செட்டை செரீனா தனதாக்கினார். ஆனால் 2-வது செட்டில் செரீனாவுக்கு இந்த அளவுக்கு பெர்டென்ஸ் தொந்தரவு கொடுக்க வில்லை.
1 மணி 40 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் செரீனா 7-6 (9-7), 6-4 என்ற நேர் செட்டில் பெர்டென்சை தோற்கடித்து பிரெஞ்ச் ஓபனில் 4-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். ஒட்டுமொத்த கிராண்ட்ஸ்லாம்களில் அவர் இறுதிப்போட்டியை எட்டுவது இது 27-வது முறையாகும்.
இதுவரை...
சாம்பியன் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டத்தில் 21 கிராண்ட்ஸ்லாம் வென்றவரான செரீனாவும், 22 வயதான முகுருஜாவும் இன்று (சனிக்கிழமை) பலப்பரீட்சை நடத்துகிறார்கள். இதில் 34 வயதான செரீனா வாகை சூடினால், அதிக கிராண்ட்ஸ்லாம் வென்றவர்களின் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ள ஜெர்மனியின் ஸ்டெபி கிராப்பின் (இவரும் 22 கிராண்ட்ஸ்லாம்) சாதனையை சமன் செய்து விடுவார். மாறாக முகுருஜா வெற்றி பெற்றால் அது அவரது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டமாக அமையும்.
இருவரும் இதுவரை 4 ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்து அதில் 3-ல் செரீனாவும், ஒன்றில் முகுருஜாவும் வெற்றி கண்டுள்ளனர். 2015-ம் ஆண்டு விம்பிள்டன் இறுதி ஆட்டத்தில் செரீனாவிடம் அடைந்த தோல்விக்கு பழிதீர்க்கும் உத்வேகத்துடன் முகுருஜா இருக்கிறார். இறுதி சுற்றுக்கு வந்ததன் மூலம் தரவரிசையில் 3-வது இடத்தை உறுதி செய்துள்ள முகுருஜா, கோப்பைக்கு முத்தமிட்டால் 2-வது இடத்தை பிடிப்பார்.
ஜோகோவிச்-முர்ரே
ஆண்கள் ஒற்றையர் அரைஇறுதியில் ‘நம்பர் ஒன்’ வீரர் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், டொமினிக் திம்முடன் (ஆஸ்திரியா) மோதினார். இதில் அதிரடியாக ஆடிய அனுபவம் வாய்ந்த ஜோகோவிச் 6-2, 6-1, 6-4 என்ற நேர் செட் கணக்கில் டொமினிக்கை நொறுக்கி பிரெஞ்ச் ஓபனில் 4-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். ஜோகோவிச் இதுவரை பிரெஞ்ச் ஓபனை மட்டும் வென்றதில்லை என்பது நினைவு கூரத்தக்கது.
இன்னொரு ஆட்டத்தில் 2-ம் நிலை வீரர் ஆன்டி முர்ரே (இங்கிலாந்து) 6-4, 6-2, 4-6, 6-2 என்ற செட் கணக்கில் நடப்பு சாம்பியன் வாவ்ரிங்காவை (சுவிட்சர்லாந்து) வெளியேற்றி இறுதிசுற்றை அடைந்தார். 79 ஆண்டுகளுக்கு பிறகு அதாவது 1937-ம் ஆண்டுக்கு பிறகு பிரெஞ்ச் ஓபனில் இறுதிப்போட்டியை எட்டிய முதல் இங்கிலாந்து வீரர் என்ற வரலாற்று சாதனையை முர்ரே நிகழ்த்தினார்.
முர்ரே கூறுகையில், ‘களிமண் தரை போட்டிகளில் நான் எப்போதும் தடுமாறியது உண்டு. அதனால் இறுதிப்போட்டிக்கு வருவேன் என்று எதிர்பார்க்கவே இல்லை. மிகவும் மகிழ்ச்சியும், பெருமிதமும் அடைகிறேன். எனது மிகச்சிறந்த ஆட்டங்களில் இதுவும் ஒன்று’ என்றார். நாளை நடக்கும் இறுதி ஆட்டத்தில் ஜோகோவிச்-முர்ரே மோதுகிறார்கள்.