ஐ.நா விசேட அறிக்கையாளர் அடுத்த வாரம் இலங்கை வருகிறார்!
பிரசுரிக்கபட்ட திகதி: 04/06/2016 (சனிக்கிழமை)
நல்லிணக்கப் பொறிமுறை தொடர்பான இலங்கை அரசின் செயற்பாடுகளை ஆராய உண்மை, நீதி, மீண்டும் பிரச்சினைகள் ஏற்படாததை உறுதிப்படுத்துவது தொடர்பான ஐ.நா விசேட அறிக்கையாளர் பப்லோ டி கிரீப் அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 32ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் 13ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது. இந்த அமர்வில் இலங்கை தொடர்பான ஐ.நா. தீர்மானத்தின் முன்னேற்றம் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் 29ஆம் திகதி வாய்மொழி மூல அறிக்கையைச் சமர்ப்பிக்கவுள்ளார். அதற்கு முன்னர் இடம்பெறும் டி கிரீப்பின் பயணம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகின்றது.
இவரின் நிகழ்ச்சி நிரல் தொடர்பில் வெளிவிவகார அமைச்சு உத்தியோகபூர்வ தகவல் எதையும் வெளியிடவில்லை. ஆனால், இலங்கை அரசின் உயர்மட்டத்தினருடனும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடனும் பப்லோ டி கிரீப் பேச்சுக்களை நடத்துவார் என்று அறியமுடிகின்றது. வடக்கு மாகாணத்துக்கும் இவர் பயணம் மேற்கொள்வதுடன், பாதிக்கப்பட்ட மக்களை அங்கு சந்திப்பார் என்றும் அறியமுடிகின்றது.
ஐ.நாவில் நிறைவேற்றப்பட்ட பொறிமுறையை இலங்கையில் நிறுவுவது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் நியமிக்கப்பட்டுள்ள நல்லிணக்கம் தொடர்பான செயலணியுடனும் இவர் கலந்துரையாடவுள்ளார்.