மஹிந்தவின் பாதுகாப்பு குறைப்புக்குப் பின்னால் இந்தியா, மேற்குலகம்! - ரம்புக்வெல குற்றச்சாட்டு
பிரசுரிக்கபட்ட திகதி: 04/06/2016 (சனிக்கிழமை)
மஹிந்த ராஜபக் ஷவின் பாதுகாப்பினை குறைக் கும் சூழ்ச்சித் திட்டத்தின் பின்னணியில் இந்தியா மற்றும் மேற்குலக சக்திகளே உள்ளன என்று பாராளுமன்ற உறுப்பினர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். ராஜகிரியவில் அமைந்துள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் நேற்று இடம்பெற்ற கூட்டு எதிர் கட்சியின் ஊடக சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் கெஹேலிய ரம்புக்வெல்ல மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்தும் கூறுகையில், மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு குறைப்பு விவகாரம் தொடர்பில் அரசாங்கம் பல்வேறு காரணங்களை கூறி வருகின்றது. ஏனைய தலைவர்களை போன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை குறிப்பிட முடியாது . ஆசிய வலயத்தை எடுத்துக் கொண்டாலும் மஹிந்த ராஜபக்ஷ முக்கியமான தலைவர் . சர்வதேசத்தின் அழுத்தங்களுக்கும் புலம்பெயர் தமிழர்களுக்கு அச்சப்பட்டும் பாதுகாப்பை குறைத்தமையானது மிகவும் மோசமான நிலையாகும்.
ஜே.ஆர்.ஜயவர்தனவின் ஆட்சி காலத்தில் விடுதலை புலிகளுக்கு எதிராக போர் தொடுக்கப்பட்ட போது இந்தியா கடுமையாக அச்சுறுத்தியது. வானில் பருப்பு போன்றவற்றை போட்டு இலங்கையின் இறையாண்மையை மீறியது. அது போதாது என்று இராணுவத்தை அனுப்புவதற்கு முன்னர் போரை நிறுத்துமாறு கூறி இந்தியா அச்சுறுத்தியது. இதனையடுத்து விடுதலை புலிகளுக்கு எதிரான போர் நிறுத்தப்பட்டது.
இவ்வாறு இலங்கையை ஆட்சி செய்த ஜனாதிபதிகளுக்கு எதிராக சர்வதேச தலையீடுகள் காணப்பட்டது. ஆனால் அனைத்து சவால்களையும் எதிர் கொண்டு மஹிந்த ராஜபக்ஷ மாத்திரமே விடுதலை புலிகளை அழித்தார். அதற்காக இன்று அவரை ஆட்சியில் இருந்து தூக்கி எறிந்து விட சர்வதேச சதி செய்தது. தற்போது அவரது பாதுகாப்பும் குறைக்கப்பட்டுள்ளது. இதனை வன்மையாக கண்டிப்பதோடு மிகவும் இழிவான செயலாகவே கருதுகின்றோம். நாட்டிற்காக பல தியாகங்களை செய்த மஹிந்த ராஜபக்ஷவிற்கு புலி ஆதரவாளர்கள் லண்டன் விமான நிலையத்தை விட்டு வௌியே செல்ல அனுமதிக்க வில்லை .அவ்வாறான செயல்களை மக்கள் மறந்து விட வில்லை எனவே மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பை குறைத்து இழிவான அரசியலை செய்ய வேண்டாம் என குறிப்பிட்டார்