இந்தியா-அமெரிக்க இடையே மிகுந்த ஒற்றுமை: மோடி பேச்சு
பிரசுரிக்கபட்ட திகதி: 09/06/2016 (வியாழக்கிழமை)
ஜனநாயக நாடுகளான இந்தியா-அமெரிக்கா இருநாடுகளிடையே மிகுந்த ஒற்றுமை உள்ளது என பிரதமர் மோடி அமெரிக்க பார்லியில் உரையாற்றினார்.
மூன்று நாள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி அமெரி்க்க பார்லிமென்ட்டின் கூட்டு கூட்டத்தில் உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது: அமெரிக்க பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்த அழைத்ததற்கு மிக்க நன்றி. ஜனநாயகத்தின் கோவிலான இந்த சபை, ஏனைய ஜனநாயகங்களுக்கு பெருமை சேர்த்துள்ளது.
மனிதர் அனைவரும் சரிநிகர் சமம் என ஆபிரகாம் லிங்கனின் வார்த்தைக்கு வடிவம் தந்த சபை இது.உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் பிரதிநிதியாக இங்கு பேசுவதில் பெருமையடைகிறேன்.
இந்த நாட்டின் வீரமிகு வீரர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி என் சுற்றுப்பயணத்தை துவங்கினேன். உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தை நீங்கள் கவுரவித்துள்ளீர்கள்.ஒவ்வொரு குடிமகனும் சரிநிகர் சமம் என்பதில் இருநாடுகளும் நம்பிக்கை கொண்டுள்ளன.இந்தியா ஒன்றாக வாழ்கிறது, ஒன்றாக வளர்கிறது, ஒன்றாக கொண்டாடுகிறது.நான் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை என் அரசாங்கத்தின் புனித நுாலாக கருதுகிறேன்.
காந்தியின் அஹிம்சை கொள்கையால் ஈர்க்கப்பட்டவர் மார்ட்டின் லுாதர் கிங்.
பேச்சுரிமை, வழிப்பாட்டு உரிமை, சமத்துவ உரிமை ஆகியவற்றை எங்கள் நாட்டின் தலைவர்கள் எங்களுக்கு அடிப்படை உரிமைகளாக அளி்த்திருக்கிறார்கள்.
யோகா எனும் மிகப்பெரிய கொடையை இந்தியா உலகிற்கு வழங்கியிருக்கிறது. 30 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்கள் யோகா செய்கிறார்கள். இந்தியா இதுவரை யோகாவிற்கு அறிவுசார் சொத்துரி்மை பெறவில்லை.
அமெரிக்காவிடம் மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியா அதிகமாக வர்த்தகங்கள் மேற்கொள்கிறது.இருநாட்டு நட்புறவை வளர்ப்பதில் அமெரிக்கா மிகவும் உதவியிருக்கிறது.
சர்வதேச அளவில் பயங்கரவாதம் மிகப்பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. பயங்கரவாதத்திற்கு மதம் கிடையாது. பயங்கரவாதிகளுக்கு எதிரான போரி்ல் ஆயிரகணக்கான வீரர்களை இழந்து வருகிறோம்.ஐக்கிய நாடுகள் அமைதிப்படையில் இந்தியா அதிகப்படியான பங்களிப்பை அளித்து வருகிறது.பூமி தாயின் அரவணைப்பில் இருக்கும் நாம் அமைதியுடன் வாழ்வதில் நம்பிக்கை கொண்டுள்ளோம்.
பயங்கரவாதத்தை எதிர்கொள்ள இருநாடுகளும் மிகுந்த ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டி உள்ளது. மனிதநேயத்தை விரும்பும் அனைவரும் இணைந்து செயல்பட்டு ஒரே குரலில் பயங்கரவாதத்தை எதிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.