கோபா அமெரிக்கா கால்பந்து: கால் இறுதியில் கொலம்பியா
பிரசுரிக்கபட்ட திகதி: 09/06/2016 (வியாழக்கிழமை)
கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியின் நூற்றாண்டு விழா தொடரில், கால் இறுதிக்கு முன்னேறிய முதல் அணி என்ற பெருமையை கொலம்பியா தட்டிச் சென்றது. பாசடினா ரோஸ் பவுல் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த விறுவிறுப்பான ஏ பிரிவு லீக் ஆட்டத்தில் கொலம்பியா - பராகுவே அணிகள் மோதின. இதில் அபாரமாக விளையாடிய கொலம்பியா அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
அந்த அணியின் பக்கா 12வது நிமிடத்திலும், கேப்டன் ஜேம்ஸ் ரோட்ரிகஸ் 30வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். பராகுவே வீரர் அயலா 71வது நிமிடத்தில் ஆறுதல் கோல் போட்டார். ஏ பிரிவில் கொலம்பியா அணி தொடர்ச்சியாக 2 வெற்றியுடன் 6 புள்ளிகள் பெற்று முன்னிலை வகிப்பதுடன் கால் இறுதி வாய்ப்பையும் உறுதி செய்தது. மற்றொரு ஏ பிரிவு லீக் ஆட்டத்தில் அமெரிக்கா 4-0 என்ற கோல் கணக்கில் கோஸ்டா ரிகா அணியை வீழ்த்தியது. அந்த அணி 3 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. ஈகுவடார் (1), ஹைதி (0) அணிகள் பின்தங்கியுள்ளன.