சொத்து குவிப்பு வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக தரப்பு எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/06/2016 (வெள்ளிக்கிழமை)
சொத்துக்குவிப்பு வழக்கில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் விடுதலைக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்கள் மற்றும் சொத்துக்குவிப்பு வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் ரிவர்வே அக்ரோ புரொடக்ட்ஸ், மீடோ அக்ரோ பார்ம்ஸ் பிரைவேட் லிமிடெட், லெக்ஸ் பிராபர்ட்டி டெவப்மெண்ட் பிரைவேட் லிமிடெட், ராம்ராஜ் அக்ரோ மில்ஸ் பிரைவேட் லிமிடெட், இந்தோ தோகா கெமிக்கல்ஸ் பிரைவேட் லிமிடெட், சிக்னோரா எண்டர்பிரைசஸ் லிமிடெட் ஆகிய 6 நிறுவனங்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவ ராய் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடந்து வந்தது.
இந்த வழக்கில் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்த மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணை தொடர்பாக அனைத்து தரப்பு வாதங்களும் கடந்த 1-ந் தேதி நிறைவடைந்தது. ஜெயலலிதா உள்ளிட்டோர் தொடர்பான 6 நிறுவனங்களை விடுவித்ததற்கு எதிரான மனுவின் மீது கர்நாடக அரசு தரப்பு கடந்த செவ்வாய்க்கிழமை தனது வாதத்தை முன்வைத்தது. இதைத் தொடர்ந்து நிறுவனங்கள் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஹரின் பி.ராவல் தன்னுடைய வாதத்தை முன்வைத்தார்.அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் வழக்கின் மீதான தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். மேலும் சுருக்கமான வாதங்களை எழுத்துவடிவில் வருகிற 10-ந் தேதிக்குள்(வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்யுமாறும் உத்தரவிட்டனர்.
இதன்படி இன்று கர்நாடக அரசு தரப்பு எழுத்துப்பூர்வ வாதத்தை முன்வைத்தது. உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு இதுவரை செய்த வாதங்கள் சுருக்கமாக தாக்கல் செய்யப்பட்டது. அதில், 6 நிறுவனங்களும் சொத்துக்குவிப்பை மறைப்பதற்காக துவங்கப்பட்டது. 4 நிறுவனங்களுக்கும் ஜெயலலிதா, சசிகலா, உட்பட 4 பேர் மூலம் முதலீடுகள் கிடைத்தன. எதற்காக தொடங்கப்பட்டதோ அதற்கான பணியை நிறுவனங்கள் மேற்கொள்ளவில்லை இதுபோன்ற வாதங்கள் முன்வைக்கப்பட்டன.