ஈராக்கில் கூட்டுப்படைகள் நடத்திய வான்வழி தாக்குதலில் ஐ.எஸ். தலைவர் அல்-பாக்தாதி காயம்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/06/2016 (சனிக்கிழமை)
ஈராக் மற்றும் சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். அமைப்பினருக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் வான்தாக்குதலை நடத்தி வருகின்றன. இந்த அமைப்பின் தலைவரான அபுபக்கர் அல்-பாக்தாதி, ஈராக்கில் சிரியா எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் அமைந்திருக்கும் ஐ.எஸ். தலைமையகத்துக்கு வந்திருப்பதாகவும், அங்கு நடைபெறும் ஆலோசனை கூட்டம் ஒன்றில் பங்கேற்று இருப்பதாகவும் கூட்டுப்படைக்கு நேற்று முன்தினம் உளவுத்தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து கூட்டுப்படைகளின் விமானங்கள் ஈராக்-சிரியா எல்லைப்பகுதிகளில், குறிப்பாக பாக்தாதி பங்கேற்ற கூட்டம் நடைபெறும் பகுதியை குறிவைத்து வான்வழி தாக்குதல்களை அரங்கேற்றின.
இதில் பாக்தாதியும், ஐ.எஸ். அமைப்பின் முன்னணி தலைவர்கள் சிலரும் காயமடைந்ததாக உள்ளூரில் இருந்து உறுதியான தகவல்கள் கிடைத்திருப்பதாக ஈராக்கின் அல் சுமேரியா தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது. எனினும் இந்த தகவலை தற்போது உறுதிப்படுத்த முடியாது என கூட்டுப்படைகளின் செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
ஏற்கனவே, கூட்டுப்படைகளின் தாக்குதலில் ஐ.எஸ். தலைவர் காயமடைந்ததாகவும், கொல்லப்பட்டதாகவும் சமீப ஆண்டுகளில் அடிக்கடி செய்தி வெளியாகி இருந்தது. ஆனால் அவை உறுதிப்படுத்தப்படாத நிலையில், தற்போது மீண்டும் அவர் காயமடைந்த தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.