தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் புதிய அரசு வித்தியாசமான அணுகுமுறைகளைக் கையாளுகின்ற போதும், நல்லிணக்கம் உரிய முறையில் தென்படவில்லை. நீதி, சமத்துவம் , ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதில் அரசிடம் சரியான திட்டம் இல்லை என்று நேற்று நாடாளுமன்றத்தில் ஆதங்கம் வெளியிட்டார் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன்.
வடக்கு, கிழக்கில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் நேற்று சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றிய எதிர்க்கட்சித்தலைவர் மேலும் தெரிவிக்கையில்,
"யுத்தம் இடம்பெற்ற 7 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும், வடக்கு, கிழக்கைச் சேர்ந்த மக்கள் இன்றும் தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படாதுள்ளனர். இராணுவத்தினர் தொடர்ச்சியாக மக்களின் காணிகளில் தங்கியுள்ளனர். இதனால் மீள்குடியேற்றம் தடைப்பட்டுள்ளது. சில காணிகள் இணுவத்தினரால் பயன்படுத்தப்படவில்லை. பொதுமக்களிடம் கையளிக்கப்படவுமில்லை. இதனால் அந்தக் காணிகள் பயன்பாட்டுக்கு ஒவ்வாததாகக் காணப்படுகின்றன. நாட்டின் வரலாற்றில் இன்று நாம் மிக முக்கிய தருணத்தில் இருக்கின்றோம். தமிழ் மக்களின் நல்லிணக்கம் தற்போது நாட்டின் மிக முக்கிய தேவையாக உள்ளது. நல்லிணக்கம் அடிப்படைத் தேவையாக உள்ளது.
2015 ஜனவரியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு எமது மக்கள் காரணமாக உள்ளனர். நீதி, சமத்துவத்தை எதிர்பார்த்திருந்த எமது மக்கள், புதிய அரசினூடாக தமது வாழ்வு மீள்கட்டியெழுப்பப்படும் - திருப்திப்படக் கூடிய நிலை ஏற்படும் என்று எதிர்பார்த்திருந்தனர். ஆனால், ஜனாதிபதி ஆட்சிக்கு வந்து 17 மாதங்கள் கடந்துள்ள நிலையிலும், புதிய அரசு ஆட்சிக்கு வந்த 9 மாதங்கள் கடந்துள்ள நிலையிலும், அரசின் செயற்பாடுகள் குறித்து தமிழ் மக்கள் திருப்தியடையக்கூடிய நிலைமை இல்லை. நல்லிணக்கம் உரிய முறையில் தென்படவில்லை. அரசு எதுவும் செய்யவில்லை என்பதல்ல இதன் பொருள். இன்னும் பல விடயங்களை மேற்கொண்டிருக்கலாம் என நாம் நினைக்கின்றோம். தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து புதிய அரசு வித்தியாசமான அணுகுமுறைகளைப் கடைப்பிடிக்கின்றது. இருப்பினும், திட்டமிட்ட செயற்பாடுகளைக் காண முடியவில்லை.
குறிப்பாக காணிகளை விடுவிக்கும் விடயத்தில் ஜனாதிபதி, பிரதமருடன் நாம் கலந்துரையாடியுள்ளோம். இன்னும், சில நாட்களில் ஜனாதிபதி யாழ்ப்பாணம் செல்லவுள்ளார் என ஊடகங்கள் வாயிலாக நாம் அறிந்தோம். இதன்போது காணி விடுவிப்பு தொடர்பில் இராணுவத்தினர், பொதுமக்களுடன் இடம்பெறும் கூட்டத்தில் ஜனாதிபதி பங்கேற்பார் என்றும் நாம் அறிகின்றோம். காணி விடுவிப்பு விடயத்தில் சரியான முடிவுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். முழுமையாக இல்லாவிட்டாலும் பெருந்தொகையான காணிகள் விடுவிக்கப்பட வேண்டியுள்ளது. இதற்காக முடிவுகள் எடுக்கப்பட வேண்டிய நேரம் வந்து விட்டது. எனவே, உரிய முறையில் முடிவுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
வடக்கு, கிழக்கைச் சேர்ந்த விவசாயிகள், மீனவர்கள், கைத்தொழிலாளர்கள் தமது தொழிலை முன்னெடுக்கத் தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதா? எமது மக்கள் தமது வாழ்வாதாரத்தை முன்னெடுக்க உதவிகளை வழங்க அரசிடம் முறையான திட்டம் இல்லை. இதேவேளை, அரசின் தொழில் வாய்ப்புகளில் வடக்கு, கிழக்கு இளைஞர்கள் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகின்றனர். வடக்கு, கிழக்கில் உள்ள அரச பதவிகளலும் நீண்டகாலமாக பாரபட்சம் காட்டப்படுகின்றது. கொழும்பிலுள்ள அமைச்சர்கள் தமது அரசியல் தேவைக்கேற்றவாறு தொழில்வாய்ப்புக்களை வழங்குகின்றனர். தமிழ், முஸ்லிம், சிங்கள அமைச்சர்கள் தமக்கு தேவையானவர்களுக்கு அரச வேலைவாய்ப்புக்களை வழங்குகின்றனர்.
கூலித் தொழில் வாய்ப்புக்களை வழங்குவதிலும் இப்படியான நிலைமையே காணப்படுகிறது. இதனால் படித்த – தகுதியான இளைஞர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். உங்களது ஆட்சியில் இதுவரைக் காலமும் வழங்கப்பட்ட வேலை வாய்ப்புக்கள் தொடர்பான தகவல்களை எடுத்துப்பார்த்தால் உண்மை நிலை புரியும். வடக்கு, கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தி 18 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 16 பேர் இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவர்களாவர். அதாவது, தமிழ்ப் பிரதிநிதித்துவத்தில் 85 சதவீத பங்கை நாம் வகிக்கின்றோம். இவ்வாறான நிலையில் இடம்பெறும் செயற்பாடுகள் சமத்துவமானதா?ஜனநாயகமானதா? ஜனநாயகம், சமத்துவத்தின் அடிப்படையில் அரசமைப்பில் கூறப்பட்டுள்ளதற்கமைய இந்த நாட்டின் ஆளுகையில் எமக்கும் பங்குண்டு. இந்த ஜனநாயகத்தையும், சமத்துவத்தையும் உறுதிப்படுத்துவது அரசின் கடமையாகும். எனவே, இந்த நிலைமை குறித்து உரிய முறையில் அவதானம் செலுத்த வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.
வடக்கு, கிழக்கைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும். இந்த நிலைமை இனிமேலும் தொடரக் கூடாது என்று எனது ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றேன். இந்தப் பிரச்சினைக்கு உரிய முறையில் தீர்வு காணப்பட வேண்டும். வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கும் அந்த மாகாணங்களை மீளக் கட்டியெழுப்புவதற்கு மூலதனங்கள் தேவைப்படுகின்றன. இதற்காக வெளிநாட்டு முகராண்மைகள், நன்கொடையாளர்களினால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வை மீளக்கட்டியெழுப்ப நிதி வழங்கப்படுகிறது. ஆனால், இவற்றைக் கையாள்வது தொடர்பில் அந்த மக்களின் பிரதிநிதிகளாகிய எம்முடன் அரசு கலந்துரையாடுவதில்லை. இந்த நிலைமை தொடர்ந்தும் நீடிக்குமா என்று தெரியவில்லை. இந்த விடயத்தில் அரசு எம்முடன் கலந்துரையாட வேண்டும்.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 50 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும், அந்தச் சட்டத்தின் கீழ் இன்றும் பலர் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இவர்களை விடுவிக்க ஜனாதிபதி, பிரதமருடன் நாம் கலந்துரையாடவுள்ளோம். எமது தரப்பிலும் பாரிய முயற்சிகளை நாம் மேற்கொண்டுள்ளோம். இன்னும் 150 பேர் விடுதலை செய்யப்படாமல் சிறையில் உள்ளனர். இவர்களின் விடுதலை தொடர்பில் சிலர் தேசிய பாதுகாப்புடன் தொடர்புபடுத்திக் கூறுகின்றனர். சமத்துவம், நீதி, மக்கள் சமமாக நடத்தப்படுதல் என்பவற்றினூடாகவே தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். சிலர் சோடிக்கப்பட்டவாறு கதைக்கின்றனர்.
எனவே, இந்த விடயங்கள் குறித்து அரசு திட்டமிட்வாறு செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் உங்களுக்கு நன்கு தெரியும். ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரால் எதிர்வரும் 29 ஆம் திகதி வாய்மூல அறிக்கை வெளியிடப்படவுள்ளது. அடுத்த வருட முற்பகுதியில் முழுமையான அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. இவ்வாறான நிலையில் வடக்கு, கிழக்கின் நிலைமை தொடர்பில் அரசு முன்னேற்றத்தைக் காட்ட வேண்டும். யதார்த்தமான நல்லிணக்கத்தை உருவாக்கி நாட்டில் ஒற்றுமையைக் கட்டியெழுப்பும் வகையில் அரசு செயற்பட வேண்டும். இதற்காக நன்கு திட்மிடப்பட்ட செயற்பாடுகளை அரசு முன்னெடுக்க வேண்டும். இந்த நிலைமைகளை மாற்றுவதற்கு ஒன்றிணைந்து செயற்பட நாம் ஆர்வமாக உள்ளோம்" - என்றார்.