பிரான்சின் மார்செய் நகரில் நடைபெற்ற இங்கிலாந்து மற்றும் ரஷியாவுக்கு இடையிலான யூரோ 2016 கால்பந்து போட்டி ஆட்டத்தின் முன்னரும் பின்னரும் வன்முறைகள் நடைபெற்றுள்ளன.
ஐரோப்பிய கால்பந்து விளையாட்டின் நிர்வாக அமைப்பான யுஇஃபா, கடுமையாக காயமடைந்த இருவர் உட்பட குறைந்தது முப்பது பேரை காயமடைய செய்துள்ள, இந்த வன்முறைகள் தொடர்பாக புலனாய்வு ஒன்றை தொடங்கியுள்ளது.
கால்பந்து போட்டி ஆட்டம் தொடங்குவதற்கு முன்னதாக மார்செய்யின் பழைய துறைமுகப் பகுதியில் நடைபெற்று கொண்டிருந்த மோதல்களை காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பீச்சியடித்தும் கலைத்தனர்.
இரு அணிகளும் தலா ஒரு கோல் என்று போட்டி ஆட்டம் சமநிலையில் முடிந்தவுடன் ரஷிய அணி ரசிகர்கள் இங்கிலாந்து அணி ஆதரவாளர்களை விளையாட்டு அரங்கிற்குள் வைத்து தாக்கினர்.நீஸ் நகரத்திலும் வட அயர்லாந்து மற்றும் பிரான்ஸ் ரசிகர்களுக்கு இடையே மோதல்கள் நடைபெற்றன.அவ்விடத்தில் ஒழுங்கு நிலைநாட்டப்படுவதற்கு முன்னர் ஆறு பேர் காயமடைந்திருந்தனர்