இலங்கை-இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது.
இதில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 416 ரன்களும், இலங்கை அணி 288 ரன்களும் எடுத்தன. 4-வது நாளில் இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 233 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
இந்த இன்னிங்சில் இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹாலெஸ் 58 ரன்கள் இருக்கையில் நுவான் பிரதீப் பந்து வீச்சில் போல்டு ஆனார்.
ஆனால் நடுவர் ராட் டக்கர் (ஆஸ்திரேலியா) அதனை நோ-பால் என்று அறிவித்தார். ஆனால் டெலிவிஷன் ரீபிளேயில் பந்து வீசுகையில் நுவான் பிரதீப்பின் கால் கிரீசை தாண்டவில்லை என்பது தெரிந்தது.
இந்த விவகாரம் குறித்து இலங்கை அணியின் மேலாளர் செனநாயகே, பயிற்சியாளர் கிரகாம் போர்டு ஆகியோர் போட்டி நடுவரை அணுகி தங்களது அதிருப்தியை தெரிவித்தனர்.
இதற்கிடையில் நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இலங்கை அணியினர் தங்களது ஓய்வு அறை அருகில் உள்ள பால்கனியில் இலங்கை தேசிய கொடியை பறக்கவிட்டனர்.
சுமார் 45 நிமிடம் தேசிய கொடி பறந்தது. மைதானத்துக்குள் தேசிய கொடியை அணி நிர்வாகம் பறக்க விடக்கூடாது. இது பற்றி அறிந்ததும் போட்டி அமைப்பு குழுவினர் இலங்கை அணியினருடன் பேச்சுவார்த்தை நடத்தி கொடியை அகற்றினார்கள்.