டெல்லி அரசின் சட்டதிருத்த மசோதாவை குடியரசுத் தலைவர் நிராகரித்துள்ளதையடுத்து, ஆம்ஆத்மி எம்.எல்.ஏ-க்கள் 21 பேரின் பதவி பறிக்கப்படும் வாய்ப்பு உருவாகியுள்ளது. ஆம்ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்கள் 21 பேரை டெல்லி துணை அமைச்சர்களாக நியமிக்கும் சட்டத்திருத்த மசோதாவை குடியரசுத் தலைவர் நிராகரித்துள்ளார். இதனையடுத்த 21உ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதாயம் தரும் இரட்டை பதவிகள் வகித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் தகுதி நீக்கம் செய்யப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் அரசியல் சாசன விதிகளை மீறியுள்ள கெஜ்ரிவால் பதவி விலக பாரதிய ஜனதா வலியுறுத்தியுள்ளது. சட்டமன்ற உறுப்பினர்களை தேர்தல் ஆணையமோ அல்லது குடியரசுத் தலைவரோ தான் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ள பாஜக, அரசியல் சாசனப்படி கெஜ்ரிவால் நடந்திருந்தால் இந்த பிரச்சனை ஏற்பட்டிருக்காது என கூறியுள்ளது.
ஆம் ஆத்மி கட்சியை கண்டு பிரதமர் அஞ்சுவதாலேயே மசோதா நிராகரிக்கப்பட்டதாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் புகார் தெரிவித்துள்ளார். 21 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு சலுகைகள் எதுவும் வழங்கப்படவில்லை என அவர் விளக்கம் அளித்துள்ளார். தகுதி வாய்ந்த சட்டமன்ற உறுப்பினர்களை அமைச்சர்களாக பயன்படுத்திக் கொள்ள விரும்பினோம். அதனால் தான் அவர்களுக்கு வடுதுல் பொறுப்புகள் வழங்க்கப்பட்டன. அதற்காக அவர்களுக்கு ஒரு பைசா கூட ஊதியம் அளிக்கப்படவில்லை. அரசின் சலுகைகளும் அவர்களுக்கு அளிக்கப்படவில்லை. அவர்கள் மக்ள் பணி செய்வதில் பிரதமருக்கு என்ன பிரச்சனை என கெஜ்ரிவால் வினவியுள்ளார். அவர்களை தகுதி நீக்கம் செய்ய மோடி தீவிரமாக முயலுவதாகவும், டெல்லி தேர்தலில் பெற்ற தோல்வியை பிரதமரால் இன்னும் ஜீரணிக்க முடியிவ்லலை என்றும் கூறினார். அதனால் தான் தானும் செயல்படாமல் எங்களையும் செயல்படவிடாமல் தடுப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். 70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி பேரவையில் ஆம்ஆத்மிக்கு 67 உறுப்பினர்கள் உள்ளனர். அதில் 21 பேர் நீக்கப்பட்டாலும் கெஜ்ரிவால் அரசுக்கு உடனடியாக நெருக்கடி ஏதும் ஏற்பட வாய்ப்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது.