தமிழர் பிரச்சினைக்கு முதலில் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அதன் பின்னரே வடக்கு - கிழக்கில் பொருளாதார அபிவிருத்தி விடயங்களுக்கு உதவ முடியும் என்றும், சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கத்துக்குத் தெரிவித்துள்ளது. அத்துடன், போரால் பாதிக்கப்பட்ட வடக்கு - கிழக்குப் பகுதியின் பொருளாதார அபிவிருத்திக்கான நிதியைத் திரட்டும் நோக்குடன் திட்டமிடப்பட்ட டோக்கியோ மாநாடும் கைவிடப்பட்டுள்ளது.
நிரந்தர அரசியல் தீர்வு ஒன்று ஏற்படுத்துவதற்கு முன்னர் வடக்கு - கிழக்கின் பொருளாதார அபிவிருத்திக்காக, இலங்கை அரசுக்கு நிதி உதவிகளை வழங்குவதற்கு தயாராக இல்லை என்று வெளிநாட்டு இராஜதந்திரி ஒருவர் தெரிவித்துள்ளார். வடக்கு - கிழக்கின் பொருளாதார அபிவிருத்திக்கான நிதிக் கொடையாளர் மாநாட்டை நடத்துவதில் ஜப்பான் ஆர்வமாக இருந்தது. இந்த மாதத்தில் அதனை நடத்தவும் திட்டமிடப்பட்டது. ஆனால், மேற்குநாடுகள் அதில் ஆர்வம் காட்டவில்லை. ஒரு நிரந்தர தீர்வின் பின்னர் இதனைப் பற்றி அக்கறைப்படலாம் என அவை திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டன. அதனால் மாநாடு கைவிடப்பட்டு விட்டது என்று அந்த ராஜதந்திரி தெரிவித்துள்ளார்.
எனினும், இந்த மாதம் நடைபெறவிருந்த உதவி வழங்கும் மாநாடு, உலக நாடுகளின் முழுமையான ஒத்துழைப்பின்மையால் கைவிடப்பட்டுள்ளது. மாநாடு தொடர்பான முதற்கட்டப் பேச்சுக்களில் ஈடுபட்ட ஜப்பானிய அதிகாரிகளுக்கு சாதகமான சமிக்ஞைகள் கிடைக்காத காரணத்தால் மாநாடு தொடர்பான ஏற்பாடுகள் கைவிடப்பட்டன.