இயக்குனர் திருலோகசந்தர் மறைவு திரையுலகுக்கு பேரிழப்பு : ஜெயலலிதா இரங்கல்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/06/2016 (புதன்கிழமை)
பழம்பெரும் இயக்குனர் திருலோகசந்தர் முதுமை மற்றும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் இன்று காலமானார்.
அவரின் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு:
பழம்பெரும் தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஏ.சி.திருலோகச்சந்தர் உடல்நலக்குறைவினால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (15.6.2016) சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயரமும், மன வேதனையும் அடைந்தேன்.
திரைப்பட இயக்குநர் ஏ.சி. திருலோகச்சந்தர் திரையுலகம் மிகச் சிறந்த இயக்குநர்களில் ஒருவர் ஆவார். இவர் நன்கு படித்த பண்பாளர். நாகரிகமான மனிதர். ஏ.சி.திருலோகச்சந்தர் படப்பிடிப்பிற்கு வரும் ஒவ்வொரு காட்சியையும் திட்டமிட்டு திறம்பட இயக்கும் பழம்பெரும் இயக்குநர்களில் ஒருவர் ஆவார்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த “அன்பே வா”, நான் நடித்த “எங்கிருந்தோ வந்தாள்”, “தர்மம் எங்கே”, “எங்க மாமா” மற்றும் “தெய்வ மகன்” போன்ற வெற்றி திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவற்றில் நான் நடித்த “தெய்வமகன்” ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது என்ற சிறப்பினை பெற்றது.
ஏ.சி.திருலோகச்சந்தர் பெண்களை மையப்படுத்தி திரைப்படங்களை இயக்குவதிலும், கதாபாத்திரங்களின் குண இயல்புகளை தனக்கே உரிய சிறப்பான பாணியில் சித்தரிப்பதிலும் வல்லவர். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் இந்தி மொழி திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்.
எளிமையானவரும், பழகுவதற்கு இனிமையானவருமான ஏ.சி.திருலோகச்சந்தர் மறைவு திரைப்படத் துறையினருக்கு ஏற்பட்டுள்ள பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று அந்த இரங்கல் செய்தியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.